இணையதளத்தில் பாஸ்போர்ட் : அதிர்ச்சியில் ஐஸ்வர்யா

பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் பாஸ்போர்ட்டை சிலர் ஸ்கேன் செய்து இணையதளத்தில் பரவவிட்டுள்ளனர். இதில் அவரது பிறந்த நாள், எந்தெந்த நாடுகளுக்குப் போனார் உள்ளிட்ட சில விவரங்கள் வெளியாகியுள்ளனர்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.
தனது பாஸ்போர்ட்டை வெளியாட்களிடம் எப்போதும் கொடுக்கமாட்டாராம் ஐஸ்வர்யா. ஆனால் இப்போது எப்படி வெளியானது என்று புரியாமல் குழம்பியுள்ளார். பாஸ்போர்ட்டில் தனது பெயரை ஐஸ்வர்யா என்று குறிப்பிட்டுள்ளார். பிறந்த தேதி 1.11.1973 என்று உள்ளது. இதன் மூலம் ஐஸ்வர்யா ராய்க்கு 37 வயது என்பது உறுதியாகியுள்ளது.

திருமணத்துக்கு முன்பே இந்த பாஸ்போர்ட்டை எடுத்துள்ளார். இதை இண்டர்நெட்டில் வெளியிட்டது யார் என்று விசாரணை நடக்கிறது. போலீசுக்கும் இந்த பிரச்சினை ஒரு புகாராகத் தந்துள்ளனர்.

இந்த விஷயத்தில் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் மீதுதான் ஐஸ்வர்யா ராய்க்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாம். வெளிநாட்டு படப்பிடிப்பு களுக்கு செல்லும்போது விசா பெறும் நடைமுறக்காக பாஸ்போர்ட்டை படப்பிடிப்பு குழுவினர் வாங்கிச் செல்வது உண்டு. அப்போது யாரோ இதனை ஸ்கேன் செய்து இண்டர்நெட்டில் வெளியிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கு முன்பு இது போன்று முக்கிய பிரமுகரின் பாஸ்போர்ட் இண்டர்நெட்டில் வெளியான சம்பவங்கள் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சிரிக்க வைத்த கார்த்தி!

சூர்யாவிடம் இல்லாத பல விஷயங்கள் இருக்கிறது அவரது இளவல் கார்த்தியிடம்! பொய்யில்லாத சிரிப்பு, புரட்டில்லாத பேச்சு என்று அந்த 'வெரிகுட் விஷயங்களை' அடுக்கிக் கொண்டே போகலாம்.


நேற்று நடந்த 'நான் மகான் அல்ல' பிரஸ்மீட்டில் கூட கார்த்தியின் இயல்பான பேச்சில் ஒரு சினேகிதனின் மென்மை!


'மௌன ராகம் படத்தில் கார்த்திக் சார் பண்ணியது மாதிரி ஒரு கேரக்டர் இது என்று பெரும்பாலான இயக்குனர்கள் சொல்லுவாங்க. ஆனால் அந்த இடத்தை இதுவரைக்கும் யாரும் நிரப்பியதா தெரியல. இந்த படத்தில் நீங்க அந்த மௌன ராகம் கார்த்திக்கை பார்க்கலாம். இன்னம் 25 வருஷம் கழிச்சு அவரு தான் நடிச்ச படங்களை திரும்ப நினைச்சு பார்த்தார்னா அதில கட்டாயம் இந்த படமும் இருக்கும்' என்று பெரிய முன்னோட்டம் கொடுத்துவிட்டு அமர்ந்தார் நான் மகான் அல்ல படத்தின் இயக்குனர் சுசீந்திரன். இவர் சொன்ன இன்னொரு தகவல் ரொம்ப முக்கியமானது. 'பருத்தி வீரன் படத்திற்கு பிறகு கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவனிலும், பையாவிலும் கொஞ்சமாவது பருத்தி வீரன் சாயல் இருக்கும்னு சொல்வாங்க. இந்த படத்தில் அந்த சுவடே சுத்தமா இருக்காது. ரொம்ப மெனக்கட்டு நடிச்சிருக்கார்' என்றார்.


தனது அழகான மென் சிரிப்போடு பேச ஆரம்பித்தார் கார்த்தி. பருத்தி வீரன்ல 90 சதவீதம் அமீர் சார் இருந்தார்னா, அதில பத்து சதவீதமாவது நான் இருந்திருக்க மாட்டேனா? எனக்குன்னு இருக்கிற குணமும் அதில வெளிப்பட்டிருக்கும் இல்லையா? அதுதான் அடுத்தடுத்த படத்தில் வருதுன்னு நினைக்கிறேன். ஆனால் நான் மகான் அல்ல படத்தில் டோட்டலா வேறு மாதிரி கார்த்தியை பார்க்கலாம். வெண்ணிலா கபடிக்குழு பார்த்தவுடன் நான் பிரமிச்சு போனேன். அந்த படத்தில் நிறைய சைலண்ட் ஷாட்ஸ் இருந்திச்சு.




சைலண்ட்டை திரையில் ரசிக்கிற மாதிரி சொல்றது ரொம்ப கஷ்டம். அதை சரியா செஞ்சிருந்தாரு சுசீந்திரன். நாங்க கூப்பிட்டு கதையை கேட்டோம். முதல் ஆஃப் சொல்லும்போதே என்னை விழுந்து விழுந்து சிரிக்க வச்சார். இந்த படம் ரொம்ப அற்புதமா வந்திருக்கு என்றவரிடம், நான் மகான் அல்ல என்று பேரு வச்சிருக்கீங்க. ஏதும் வில்லங்கமான சீன் இருக்கா என்றொரு கேள்வி பறந்தது கூட்டத்திலிருந்து.


நான் மகான் அல்லன்னுதானே சார் வச்சுருக்கோம். நான் மன்மதன் அல்லன்னு வைக்கலையே என்றார் கார்த்தி. பின்னாலேயே பறந்து வந்த இன்னொரு கேள்வி அந்த அரங்கத்தையே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.
இப்பல்லாம் மகான்கள்தானே மன்மதன்கள் ஆகுறாங்க

கமல் ஜோடியாக சம்பளம் குறைப்பா? : திரிஷா பதில்

திரிஷா இந்தியில் அக்ஷய் குமார் ஜோடியாக நடித்த காட்டா மீட்டா படம் ரிலீசுக்கு தயாராகிறது. தற்போது கமலுடன் “மன்மதன் அம்பு” படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்திப்படத்தில் நடிக்கவும் கமலுடன் நடிக்கவும் சம்பளத்தை குறைத்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது பற்றி திரிஷாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

நான் சம்பளத்தை குறைத்ததாக வெளியாகும் செய்திகள் வெறும் புரளிதான் காட்டா மீட்டா படத்தை பிரியதர்ஷன் இயக்குகிறார். அவர் எனது குரு. அவர் கேட்டுக்கொண்டதால் அப்படத்தில் நடித்தேன். கமலுடன் நடிக்கவும் சம்பளம் குறைக்கவில்லை. பணத்தை நான் பொருடபாக நினைக்க வில்லை. கதை தான் முக்கியம்.

காட்டா மீட்டா படத்தில் நேர்மையான நகரசபை கமிஷனராக வருகிறேன். அக்ஷய்குமார் ரோடு காண்டிராக்டராக நடிக்கிறார். அவருக்கும் எனக்கும் கல்லூரியில் படிக்கும் போது காதல் மலரும் பிறகு சில சூழ்நிலைகளால் அது முறிந்து போகும். எங்கள் இருவருக்குமான பிரச்சினைகளே கதை. அருமையான கதை ரொம்ப ஈடுபாட்டுடன் நடித்தேன்.

மன்மதன் அம்பு படத்தில் கமல் ஜோடியானதன் மூலம் என் கனவு நிறைவேறியது. கமலுடன் தசாவதாரம், மர்மயோகி படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்துள்ளேன். மன்மதன் அம்பு படத்தில் கண்டிப்பாக நான் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். அது நடந்து இருக்கிறது.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் “என் ஜெஸ்ஸி கேரக்டர் சிறப்பாக அமைந்தது. இப்படத்தை இந்தியில் “ரீமேக் செய்ய இயக்குனர் கவுதம் ஏற்பாடு கள் செய்கிறார். இந்திப்படத்திலும் என்னை நடிக்க கேட்டுள்ளனர் என்றார் திரிஷா

ரூ.100 கோடி நஷ்டம் : அதிர்ச்சியில் ரிலையன்ஸ்…!

கைட்ஸ், ராவணன் என அடுத்தடுத்து இரு பெரிய படங்களின் வீழ்ச்சி, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ 100 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிச்சயம் இவ்வளவு பெரிய அடியை எதிர்ப்பார்த்திருக்காது என்பதுதான் பாலிவுட் முழுக்க பேசப்படும் விஷயமாக உள்ளது. ஹ்ரித்திக் ரோஷன் நடித்த கைட்ஸ் படம் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியானது. ஆரம்பத்தில் ரூ 54 கோடிக்கு இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை விற்கப் பேசி வந்தது ரிலையன்ஸ்.


ஆனால் படம் குறித்த எதிர்மறை செய்திகள் பரவியதும் ரூ 40 கோடி மட்டுமே கிடைத்தது. கைட்ஸ் மூலம் ஏற்பட்ட நஷ்டம் ரூ 60 கோடி எனக் கூறப்படுகிறது.

பிக் பிக்ஸர்ஸ் அடுத்து மெட்ராஸ் டாக்கீஸுடன் கூட்டாக மூன்று மொழிகளில் தயாரித்துள்ள ராவணன் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தயாரிப்புச் செலவு ரூ 100 கோடி என்று கணக்கு காட்டியுள்ளனர்.


மூன்று மொழிகளிலும் சேர்த்து ராவணன் வசூல் ரூ 53 கோடி என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்தது ரூ 40 கோடி வரை நஷ்டம் வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பெரும் நஷ்டங்கள் மூலம் அதிர்ச்சியடைந்துள்ள ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ், தனது அடுத்தடுத்த படத் தயாரிப்புகளை தள்ளிப் போட்டுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் இந்தியா எக்ஸிகியூடிவ் எடிட்டர் வஸீர் தெரிவித்துள்ளார்.

சூர்யாவுக்கு அல்வா கொடுக்கும் கார்த்தி!

கோலிவுட்டில் அதிக எண்ணிகையில் உதவி இயக்குனர்கள் வைத்திருக்கும் நான்கு இயக்குனர்கள் ஹரி, கே.எஸ்.ரவிகுமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின்.

இந்த நான்கு பேருமே கதைகளை சிறப்பாக உருவாக்க உதவி இயக்குனர்களை சாறு பிழிந்து கொள்வதில் கில்லாடிகள். அதேபோல வாங்கும் வேலைக்கு வஞ்சகம் இல்லாமல் உதவி இயக்குனர்களுக்கு கைநிறைய சம்பளம் கொடுப்பதில் இந்த நான்கு பேரையும் அடித்துக் கொள்ள முடியாது என்கிறார்கள்.

இந்த நான்கு இயக்குனர்களும் உதவி இயக்குனர்களை மூன்று குழுவாகப் பிரித்து கதை விவாதத்துக்கு ஒரு குழு, படப்பிடிப்பு தளத்து ஒரு குழு, படத்தின் முன் தயாரிப்பு பின் தயாரிப்புக்கு ஒரு குழு என்று வேலை வாங்கி வருவதாகச் சொல்கிறார்கள். இப்போது ஹரியின் கதை விவாத உதவி இயக்குனர்கள் குழு ஒரு கதையை மிகவும் சீரியஸ்ஸாக விவாதித்துகொண்டிருகிறார்களாம்.

அந்தக்கதை டிக்காபியோ நடித்த கேச் மீ. இஃப் யூ கேன் என்ற ஹாலிவுட் படத்தின் கதைக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு அதை அப்படியே சூரியா-கார்த்தி இருவருக்கும் டைலர் மேடாக பிட் பண்ண கடுமையாக உழைத்து வருவதாக இயக்குனர் ஹரியின் அலுவலக வட்டாரத்தில் இருந்து நமக்கு தகவல் கிடைக்கிறது.

ஹைடெக் திருட்டு தொழில் செய்யும் இளைஞனாக கார்த்தியும் அவரை டிரேஸ் செய்து பிடித்து பிறகு தப்பவைக்கும் சிபிஐ போலீஸாக சூரியாவும் நடிக்க இருப்பதாக தகவல் கிடைக்கிறது. சிங்கம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தை சன் பிக்ஸர் தயாரிக்க இருப்பதாகவும் உறுதியான தகவல் கிடைக்கிறது. மேலும் தற்போது தனுஷ் நடிக்கும் ஆக்‌ஷன் படத்தை இயக்க இருக்கும் ஹரி.

அந்தப் படத்தை முடித்ததும் சூரியா கார்த்தி இணையும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வருகிறது. ஆனால் கார்த்தி குறிப்பிட்டது போல ஹரி படத்தில் அவர் வில்லன் இல்லை என்கிறார்கள் உதவி இயக்குனர் வட்டாரத்தில். எப்படியோ கார்த்தி விளையாட்டாகச் சொன்னது நிஜமாகிவிட்டது!

விஜய் 37வது பிறந்த நாள் : கல்வி உதவி வழங்கி கொண்டாட்டம்

இன்று தனது 37வது பிறந்த நாளைக் கொண்டாடினார் விஜய். ஆண்டுதோறும் தனது பிறந்தநாளில் சமூக பணிகள் செய்ய வேண்டும்.

நகரம் முதல் குக்கிராமம் வரை மக்கள் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று தன் ரசிகர்களுக்குக் கூறி வரும் விஜய், ஏராளமான ஏழைகளுக்கு இன்று தன் கையால் உதவிகள் வழங்கினார்.
குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு அதிக கல்வி உதவிகளை அவர் வழங்கினார்.

பிறந்தநாளையொட்டி இன்று சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் விஜய். காலை 9 மணிக்கு பாலவாக்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமில் விஜய் முன்னிலையில் ரசிகர்கள் நூறு பேர் ரத்ததானம் வழங்கினர்.

காலை 9.30 மணிக்கு திருவான்மியூர் தியாகராஜர் தியேட்டர் எதிரிலுள்ள முத்துலட்சுமி மருத்துவமனையில் பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்கமோதிரம் அணிவித்தார்.

காலை 10 மணிக்கு கோடம்பாக்கம் அம்பேத்கார் சிலை அருகே ஊள்ள நகராட்சி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும் தங்கமோதிரம் அணிவித்தார்.

காலை 11 மணிக்கு சாலிகிராமம் ஷோபா திருமண மண்டபத்தில் அனாதை இல்லத்திற்கு சீருடைகள் வழங்கினார்.

ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவருக்கு பி.ஈ.வரை படிப்பதற்கான அனைத்து உதவிகளையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
கம்ப்யூட்டர் கல்வியில் தேர்ச்சி பெற்ற 37 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். உறுப்பு தானம் வழங்கிய 37 பேருக்கு சான்றிதழ்களும், 37 மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கினார்.

விஜய் தலைமை நற்பணி இயக்க அலுவலக வாசலில் நடந்த அன்னதானம், மதியம் 12 மணிக்கு சாலிகிராமம் காவேரி பள்ளியில் நடந்த அன்னதானம், மதியம் 12.30 மணிக்கு சின்மயா நகர் முதியோர் இல்லத்தில் நடந்த அன்னதானம் போன்றவற்றிலும் பங்கேற்றார் விஜய்.

சென்னை மாநகரில் ஈரத்ததானம் வழங்கிய 370 பேருக்கும் நற்பணிகள் செய்த 40 பேருக்கும் சான்றிதழ், புகைப்படங்களை இன்று மாலை 6 மணிக்கு ஷோபா மண்டபத்தில் வழங்குகிறார் விஜய்.

இதேபோன்ற நற்பணி நிகழ்ச்சிகள் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றன.
பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், தலைமை விஜய் நற்பணி இயக்க தலைவர் சி.ஜெயசீலன், துணைத் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ரவிராஜா, துணைச்செயலாளர் ஐ.சி.குமார், மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’

சிங்கம்’ வெற்றியைத் தொடர்ந்து ஆக்ரோஷமாக களம் இறங்கும் சூர்யாவின் அடுத்த படம் ‘ஏழாம் அறிவு’.


சமீபகாலமாக ஒன்றிரண்டு மசாலா படங்களில் நடித்து பெரும் வெற்றியையும் தேடிக் கொண்ட சூர்யா ஏழாம் அறிவில் கதாநாயகனாக நடிக்கிறார்.


உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குகிறார் ஏ.ஆர். முருகதாஸ். இசையமைக்கிறார் ஹரிஸ் ஜெயராஜ். படப்பிடிப்புடன் ஆரம்பமாகிவிட்டது ‘ஏழாம் அறிவு’. சூர்யா ஏ.ஆர்.முருகதாஸ் இணைவதால் இப்போதே இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

சென்னையில் குடியேறிய அனுஷ்கா!

வேட்டைக்காரன் விரக்தியில் ஆழ்த்தியதால் வருத்தத்தில் இருந்த அனுஷ்கா சிங்கம் ஹிட்டாகியுள்ளதால், தனது மார்க்கெட் ஹீ்ட்டாகும் என்ற நம்பிக்கையுடன் சென்னையில் ஒரு பங்களாவைப் பிடித்து ஜாகையை சென்னைக்கு மாற்றி விட்டார்.
ரெண்டு என்ற தமிழ்ப் படம் மூலம் நடிக்க வந்த அனுஷ்கா அதன் பின்னர் தெலுங்குக்கு தாவினார். அங்கு ஹிட் படங்களில் நடித்து வந்த அவர் அருந்ததி படம் மூலம் சூப்பர் ஹிட் நாயகியானார்.

இந்த நிலையில் அவரைப் பிடித்து தமிழுக்கு மீண்டும் கொண்டு வந்தனர். விஜய்க்கு ஜோடியாக வேட்டைக்காரனில் நடிக்க வைத்தனர். விஜய்யுடன் ஜோடியாக நடிப்பதால் தனக்கு தமிழில் மீண்டும் மார்க்கெட் கிடைக்கும், தமிழிலும் முன்னணிக்கு வந்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக வேட்டைக்காரன் படுத்து விட்டதால் அப்செட் ஆனார். ஆனால் தற்போது சிங்கம் வந்து அவரைக் காப்பாற்றியுள்ளது.

சிங்கம் படம் ஹிட்டாகியுள்ளதால் அனுஷ்காவும் குஷியாகியுள்ளார். ராசியில்லாத நடிகை என்று தன்னை முத்திரை குத்திவிடாமல் காப்பாற்றிய படம் என்பதால் சிங்கத்தின் வெற்றி அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.

இதையடுத்து தன்னைத் தேடி நிறைய தமிழ்ப் பட வாய்ப்புகள் வரும் என்ற நம்பிக்கையில் சென்னையில் ஒரு பங்களாவை வாடகைக்குப் பிடித்து இங்கு இடம் மாறியுள்ளார்.

இனி தான் சென்னையில்தான் தங்கி இருக்கப் போவதாகவும் தகவலை பரப்பியுள்ளாராம்.

எனவே அனுஷ்காவைப் புக் செய்ய நினைக்கும் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் ஹைதராபாத் போய் கஷ்டப்பட வேண்டியதில்லை.

உதவி இயக்குநர்களுக்கு நிலம் வாங்கிக் கொடுத்த இயக்குநர்

இயக்குநர் ஹரியின் படங்களில் வரும் ஹீரோக்கள் எல்லோருமே கொஞ்சம் தாராள குணம் படைத்தவர்களாகவே இருப்பார்கள். தனது படத்தின் ஹீரோக்களைப் போலவே தாமும் தாராள குணம் படைத்தவர்தான் என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குநர் ஹரி.

உதவி இயக்குநர்களுக்கு சம்பளம் கொடுக்கவே யோசிக்கிற இயக்குநர்களுக்கு மத்தியில், தனது உதவி மற்றும் இணை இயக்குநர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கிரவுண்ட் நிலம் வீதமாக வாங்கிக் கொடுத்திருக்கிறார் இவர்.
சென்னை புறநகர் பகுதியில் வாங்கியிருக்கும் இந்த இடத்தை உதவி இயக்குநர்கள் பெயரிலேயே பதிவு செய்து பத்திரத்தையும் கையில் கொடுத்திருக்கிறார்

பாடிக் கொண்டே இருப்பேன் : பாடகி சுவி

இவரது குரல் நம் அனைவருக்கும் அறிமுகம் ஆனது தான். பீமா ஜூவல்லர்ஸ், சரவணா ஸ்டோர்ஸ், அருண் ஐஸ்க்ரீம், பவர் சோப்,அடையார் ஆனந்தபவன் போன்று எத்தனை எத்தனை விளம்பரங்களில் இவரது குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

எண்ணற்ற விளம்பரங்களில் கேட்டுக் கேட்டு செவியில் விழுந்து பலரது இதயம் நுழைந்து இக்குரலுக்கு சொந்தக்காரர் சுவி.

இவரது காந்தக் குரல் விளம்பரங்களில் மட்டுமல்ல திரைப்படங்களிலும் பிரபலம். இப்போது உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன மணிரத்னத்தின் 'ராவணன்' படப் பாடல்கள். அப்படத்தில் வரும் 'கொடாக்கரி' பாடலைப் பாடியிருப்பவர் சுவிதான்.

இதற்கு முன் 'சரோஜா' வில் 'கோடானு கோடி', ஏகனில் 'யாஹோ', 'அலிபாபா'வில் நெஞ்சில் ஆத்தாடி,'லாடமி'ல் 'மக்கா', ' ஐந்தாம் படை'யில் 'ஷோக்கு சுந்திரி', கஜினியில் லாட்டூ..., சர்வமில் 'ஆதவன்', வாமனனில்' லக்கி ஸ்டார், 'மாசிலா மணி' யில் 'ஒடி ஒடி விளையாடு', பேராண்மையில் துப்பாக்கிப் பெண்ணே', நான் அவனில்லை -2ல் பாக உன்னாரா போன்ற பிரபல தமிழ்ப்பட பாடல்களில் ஒலித்த குரல் சுவியினுடையது தான்..
தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று மொழிகளில் பாடி வருகிறார்.

மலையாளத்தில் 'பை த பீப்பிள்' படத்தில் எல்லாப் பாடல்களைப் பாடியதுடன் இசைக் கலைஞராகவே படத்தில் தோன்றி நடித்துள்ளார். சுவியின் சாரீரம் மட்டுமல்ல சரீர வாரும் அழகானது தான் என்று பாராட்டப் பட்டார்.
இன்று பிரபலமாகி பலரது காதுகளுக்குள் கவரி வீசும் கந்தர்வக் குரல்காரர் சுவி. இவர் பாட ஆரம்பித்த முன் கதை தெரியுமா?

இவர் குரல் முதன் முதலில் தேர்வானது ஏதோ அதிர்ஷ்டத்தாலோ குலுக்கல் முறையிலோ அல்ல. முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையிலானது.
சுவி சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டம்.


எஸ்.எஸ். மியூசிக் நிறுவனம் ஒரு குரல் தேர்வு நடத்தியது. அது தேர்வல்ல குரல் வேட்டை என்றே சொல்ல வேண்டும். ஒரு ரியாலிட்டி ஷோ மூலம் ஜீவனுள்ள குரல்களை பல வடிக்கட்டில் வைத்து கடைசியில் ஜமக்காளத்தில் வடிக்கட்டி தேர்வு செய்தது. கலந்து கொண்ட 5000 பேரில் 5 பேர் தேர்வு செய்ய வேண்டும் என்றால் சுலபமானதல்ல அல்லவா? அவ்வளவு சோதனைக்களுக்கும் பிறகு ஐவர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் தான் சுவி. ஐயாயிரத்திற்கு ஐவர். இந்தக் கணக்குப்படி பார்த்தால் சுவி 'ஆயிரத்தில் ஒருவர்' என்று கூறலாம். அத்தேர்வில் இறுதி சுற்றில் சுவியுடன் வெற்றி பெற்ற பிற நால்வர் பென்னி தயாள், அனித்தா நாயர், பார்கவி பிள்ளை, அர்ஜுன் சகி ஆகியோர்.

இப்படி தன் 17 வது வயதிலேயே ஆயிரத்தில் ஒருவராக அற்புதக் குரல் வளத்துக்காக தேர்வு செய்யப்பட்டவ்ர் சுவி. இவ்வாறு தேர்வானவர்கள் ' S5' என்று அழைக்கப்பட்டனர்.

அவர்கள் இணைந்து ஒர் ஆல்பத்தில் பாடினர் பெயர். 'இசை' அதில் சுவி 'மலரே' பாடலைப் பாடினர். ப்ரவீன் மணி இசையமைத்தார். சோனி BMG நிறுவனம் வெளியிட்டது. இதை ஆஸ்கார் புகழ் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார். இது நடந்தது 2005 இன்றும் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்.

முதலில் ஆல்பத்தில் பாடிய சுவி, திரையில் பாடப் புகுந்து ஏ.ஆர். ரகுமான், இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, வித்யா சாகர் போன்ற பிரபலங்களின் இசையிலும் பாடிவிட்டார்.

இசைக் கலைஞர்கள் டோனி பிராக்ஸ்டன், கிறிஸ்டினா அகிலேரா, ஸ்டிங், மைக்கேல் ஜாக்சன், சங்கர் மகாதேவன் போன்றோரின் பாணிகள் சுவியைக் கவர்ந்தவையாம்.

'ராவணன்' படத்தில் பாடலில் மட்டுமல்ல உலக அழகி ஐஸ்வர்யா ராய் தோன்றும் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் 'தீம் மியூசிக்' கில் ஒலிப்பதும் சுவியின் குரல்தான்.

பின்னணியில் பாடுவது மட்டுமல்ல மேடையில் தோன்றிப் பாடுவது -ஆடுவது- பாடிக் கொண்டே ஆடுவது சுவிக்குக் கை வந்த கலை, மைக்கேல் ஜாக்சனுக்கு சென்னையில் நடந்த இசை சமர்ப்பண அஞ்சலி நிகழ்ச்சியில் சுவி ஆங்கிலப் பாடலைப்பாடி ஆடி அசத்தினார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் பாடும் சுவி ஆங்கிலத்தில் பாடவும் பாடும் பாடலை எழுதவும் தெரிந்தவர். ப்ரவீன் மணி இசையில் இப்போது உருவாகி வரும் ஆல்பத்தில் வரும் ஆங்கிலப்பாடலை எழுதியிருப்பது சுவிதான். இந்த ஆல்பம், தமிழ், ஆங்கிலம் மொழிகளில் உருவாகி வருகிறது.

பாடிக் கொண்டே இருப்பதே தன் லட்சியம் என் கிற சுவி தனி இசைக்குழு உருவாக்கி தலைமையேற்று இசை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்பது தான் கனவு என்கிறார்.

சுவியின் இசைக்கனவுகள் இனிதே மெய்ப்பட வாழ்த்துவோம்.

ராவணனால் குழப்பமடைந்த அமிதாப்பச்சன்

தமிழிலும், இந்தியிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு, கடந்த 18-ந் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டுள்ள படம் ராவணன்.
தமிழில் விக்ரம் ஏற்றுள்ள வீரா பாத்திரத்தை இந்தியில் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் ஏற்றுள்ளார்.


ஐஸ்வர்யா ராய் தான் இந்தி, தமிழ் என இரண்டிலும் கதாநாயகி.
ராவணன் குறித்து ஒரு இணைய தளத்தில் அமிதாப்பச்சன் கருத்து தெரிவித்துள்ளார். இந்த படம் ஆச்சரியத்தில் மூழ்க வைக்கிறது. இந்தப் படத்தை பார்த்தது ஒரு அற்புதமான அனுபவம். மணிரத்னம் இந்திய சினிமாவுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய சொத்து. காட்சிகளில் அவரது அணுகுமுறை, அவரது மனம், அவரது அறிவு, பல்வேறு கதைக்களங்களை வெளிக்கொண்டு வருவதில் அவரது கெட்டிக்காரத்தனம் தனித்துவம்மிக்கது.

அவர் தொடர்ந்து தனது மிகப்பெரும் ஆற்றலை நமது சினிமாவுக்கு வழங்கிக் கொண்டிருக்க வேண்டும். அவரது படைப்புகளால் நாம் தொடர்ந்து உற்சாகம் அடைவோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இப்படி ராவணன் படத்தைப் பார்த்த பிரமிப்பில் அதைப் பாராட்டியுள்ள அமிதாப்பச்சன், படத்தின் குறையையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

இதுபற்றி அமிதாப்பச்சன் குறிப்பிடுகையில், ராவணன் (இந்திப்படம்) மோசமாக எடிட் செய்யப்பட்டுள்ளது. எடிட்டிங் செய்யப்பட்டபோது படத்தின் முக்கியக் காட்சிகள் வெட்டி எறியப்பட்டுள்ளதால் அபிஷேக்கின் கதாபாத்திரமான வீரா எப்போதும் குழப்பமாகவே காட்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

புதிதாக பட்டம் வென்ற 'புரட்சி நாயகி' ஸ்னேகா

நடிகர்களுக்கு பட்டப் பெயர் சூட்டுவதில் இயக்குநர்களுக்கும் ரசிகர்களுக்கும் அலாதி ஆர்வம். பட்டப் பெயர்கள் இல்லாத நடிகர்களை கோலிவுட்டில் விரல் விட்டு எண்ணிவிடலாம்.

அந்த வகையில் இப்போது நடிகை ஸ்னேகாவுக்கு புதிதாக `புரட்சி நாயகி` என பட்டப் பெயர் சூட்டியுள்ளனர். பவானி ஐ.பி.எஸ். படத்திலிருந்து இனி `புரட்சி நாயகி` ஸ்னேகா என்றே அழைக்கப்படுவாராம்.

நடிகைகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே `புரட்சித் தலைவி` என்று அழைக்கப்பட்டார். அவருக்குப் பிறகு புரட்சி என்ற அடைமொழியை ஸ்னேகாவுக்கு சூட்டியுள்ளனர்.

விஜயசாந்தி நடித்த வைஜெயந்தி ஐ.பி.எஸ். படம்தான் இப்போது பவானி ஐ.பி.எஸ்.ஸாக தயாராகிறது. இந்தப் படத்தில் விஜயசாந்தி நடித்த பிறகுதான் அரசியலில் குதித்தார். ஸ்னேகாவுக்கும் அப்படி ஏதும் எண்ணமிருக்குமோ?
இது பற்றி அவரிடம் நிருபர்கள் கேட்டபோது, "எனக்கு `புன்னகை இளவரசி` பட்டம் சூட்டியது ரசிகர்கள்தான். அவர்கள் மனது புண்படக் கூடாது என்று ஏற்றேன். இந்தப் படத்தில் எனது கேரக்டருக்காக `புரட்சி நாயகி` என்று பெயர் வைத்துள்ளார்கள். ரசிகர்களுக்கு சந்தோஷம் என்றால் எனக்கு இதில் ஆட்சேபணையில்லை. இப்படி பட்டப் பெயர் வைத்ததால் அரசியலுக்கு வருவீர்களா என்று பலரும் கேட்கிறார்கள். நான் கண்டிப்பாக அரசியலுக்கு வரமாட்டேன்.

பவானி படத்தில், ஆக்ஷன் வேடத்தில் நடிக்க இயக்குநர் கிச்சா அழைத்தார். ஆக்ஷன் கேரக்டரில் நடிக்க முடியுமா? என சந்தேகம் எழுந்தது. கிச்சா உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி நடித்தேன்.

பிறகு போலீஸ் உடையில் எனது படங்களை பார்த்த பிறகு நம்பிக்கை வந்தது. ஸ்டண்ட் மாஸ்டர் தளபதி தினேஷ் அளித்த பயிற்சியும் என்னை முழுமையாக அதில் ஈடுபட்டு நடிக்க வைத்தது. ஆக்ஷன் வேடத்திலும், குடும்ப பாங்கான வேடங்களிலும் தொடர்ந்து நடிப்பேன்” என்றார்.

சிறந்த தந்தையராக அமிதாப் – ரஜினி தேர்வு!

தென்னிந்திய திரையுலகில் சிறந்த தந்தை ரஜினிகாந்த் என பிரபல திருமண இணைய தளம் தேர்வு செய்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை உலக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு ஷாதி டாட்காம் இணையதளம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. My Daddy Strongest என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த கணிப்பு, பிள்ளைகளின் மனதைப் புரிந்து கொண்டு அன்பு செலுத்துவது, அவர்களின் சுதந்திரத்தை அனுமதிப்பது என்ற காரணிகளின் அடிப்படையில் நடத்தப்பட்டது.

பாலிவுட், தென்னிந்திய சினிமா என தனித்தனியாகவே கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன. வாக்களித்த ஆண், பெண் இருபாலருமே, தந்தைகள் மிகுந்த புரிந்து கொள்ளலுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இதில் பாலிவுட்டின் சிறந்த தந்தை யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதில் சுமார் 85 ஆயிரம் பேர் கலந்துகொண்டு வாக்களித்தனர். இவர்களில் 60.6 சதவீதத்தினர் அமிதாப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
ரிஷிகபூர் (13.9), தர்மேந்திரா(9.5), அனில் கபூர் (9.4) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளனர்.

தென்னிந்திய திரையுலகில் நடிகர் ரஜினிகாந்த் சிறந்த தந்தையாக தேர்வு செய்யப்பட்டார்.

வாக்களித்தவர்களில் 42 சதவீதத்தினர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர்.

அமிதாப்புக்கு அபிஷேக் பச்சன் என்ற மகனும், ஸ்வேதா நந்தா என்ற மகளும் உள்ளனர். ரஜினிக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர்.
இந்த கருத்துக் கணிப்பு குறித்து அந்த இணையதளத்தின் வர்த்தக தலைவர் கவுரவ் ரக்ஷித் கூறுகையில், “இந்திய இளைஞர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் ஒரு கணிப்பாக இதனைப் பார்க்கிறோம். காலங்கள் என்னதான் மாறினாலும், தலைமுறைகள் தாண்டினாலும், ஒரு நல்ல தந்தைக்கான தகுதிகள் என்னவாக இருக்க வேண்டும் என்பதில் மட்டும் எந்த மாறுதலும் இல்லை” என்றார்.

சிம்பு ஜோடி தமன்னா

கே.வி.ஆனந்தின் கோ படத்திலிலிருந்து சிம்பு விலகியதற்கு தமன்னாவை ஹீரோவாகப் போடாததும் ஒரு காரணம் என்று சில பத்தி‌ரிகைகள் எழுதின.

இந்த குற்றச்சாற்றை சிம்பு மறுத்தார்.

தமன்னாவை சிம்பு ஹீரோயினாகப் போடச் சொன்னது உண்மையோ பொய்யோ... சிம்புவின் சீக்ரெட் ஆசை விரைவில் நிறைவேறப் போகிறது.
லிங்குசாமியின் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் பெய‌ரிடப்படாதப் படத்துக்கு தமன்னாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் வெளியாகிறது. தமிழில் சிம்பு ஹீரோ. தெலுங்கில் மகேஷ்பாபு.

தமிழில் தமன்னா ஹீரோயின். தெலுங்கில்? இன்னும் முடிவு செய்யவில்லையாம்.

ராவணன் : ஒரே நாளில் ரூ.20 கோடி வசூல்!

மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், கார்த்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள ராவணன் படம் முதல் நாளில் ரூ.20 கோடியை உலக அளவில் வசூலித்துள்ளதாக ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியில் அபிஷேக் பச்சனை நாயகனாகக் கொண்டும் தமிழில் விக்ரமை நாயகனாகக் கொண்டும் மற்றும் தெலுங்கிலும் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

படத்தின் முக்கிய கேரக்டர்களில் விக்ரம், அபிஷேக், ஐஸ்வர்யா ராய், கார்த்திக் தவிர பிருத்விராஜ், பிரபு, பிரியா மணி, ரஞ்சிதா, முன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று தமிழ், தெலுங்கு , இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நாளில் இப்படம் திரைக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் 2200 தியேட்டர்களில் இப்படத்தை ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.

இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.20 கோடி என ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.

7 வயது இளையவருடன் மனீஷாவுக்கு திருமணம்

தன்னை விட 7 வயது குறைந்த தொழிலதிபரை கணவனாகக் கைப்பிடித்தார் மனீஷா கொய்ராலா.

இன்று சனிக்கிழமை நேபாளத் தலைநகர் காட்மாண்டுவுக்கு அருகில் உள்ள கோகர்னக் காட் வனத்தில் மனீஷாவுக்கும் தொழிலதிபர் சாம்ராட்டுக்கும் திருமணம் நடந்தது.

நேபாள இந்து வழக்கப்படி மூன்று நாட்கள் திருமணம் நடப்பது வழக்கம். அதன்படி இன்று இரண்டாம் நாள். நாளையும் திருமண சடங்குகள் நடக்கின்றன.

அடுத்த வாரம் திருமண வரவேற்பு நடக்கிறது. இதில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருமணத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
தன்னைவிட 7 வயது குறைவான இளைஞரை மனீஷா திருமணம் செய்து குறித்து அவரிடம் கருத்து கேட்டனர் சில தொலைக்காட்சி நிருபர்கள். அதற்கு அவர் இதுபற்றி எதுவும் கூற முடியாது என்றும், எங்கள் மனம் விரும்பி நடந்த இந்த திருமணம் குறித்து ஏதும் கூற வேண்டிய அவசியமில்லை என்றும் கூறிவிட்டார்.

மனீஷாவை அடைவது என் பாக்கியம் என்று கூறியுள்ளார் மணமகன் சாம்ராட் தகாலோ.