திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா

திருமணத்திற்கு பின் கணவர் அனுமதியுடன் தொடர்ந்து நடிப்பேன் என்று நடிகை ரம்பா கூறினார்.நடிகை ரம்பாவுக்கும், கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமாருக்கும் திருப்பதியில் வருகிற 8ந் தேதி (வியாழக்கிழமை) திருமணம் நடக்கிறது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள்.
ரம்பா இந்திரகுமார் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் வருகிற 11 ந் தேதி மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.
திருமணத்தையொட்டி, நடிகை ரம்பா சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
நான் நடிக்க வந்து, 14 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு ரசிகர்கள் இதுவரை ஆதரவு தந்ததற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கும், இந்திரகுமாருக்கும் திருப்பதியில் வருகிற 8 ந் தேதி திருமணம் நடக்கிறது. இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம், காதல் திருமணம் அல்ல.
என் கணவர் இந்திரகுமார் ஒரு தொழிலதிபர். அவருடைய நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக’ நான் இருந்தேன். அப்போது நான் அவரை ஒரே ஒரு முறை சந்தித்து இருக்கிறேன். அவர், என்னிடம் பெரிய தொழிலதிபர் என்ற பந்தா இல்லாமல் எளிமையாக பழகினார்.
அவர், என் குடும்பத்தினரை அணுகி மிக கண்ணியமான முறையில் என்னை பெண் கேட்டார். அவருடைய அணுகுமுறை எனக்கும், என் குடும்பத்தினருக்கும் பிடித்திருந்தது. அவர் ஒரு திறந்த புத்தகமாக இருந்தார். இரண்டு குடும்பத்தினரும் சந்தித்து பேசி எங்கள் திருமணத்தை நிச்சயம் செய்தார்கள்.
திருமணத்திற்கு பிறகும், என் கணவர் அனுமதியுடன் நான் தொடர்ந்து நடிப்பேன். திருமணத்திற்கு பின் நடிப்பது அல்லது நடிக்காதது என் விருப்பத்திற்கு விட்டு விட்டார்கள்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்
கேள்வி: உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் ரம்பா இந்திரன் என்று பெயர் பொருத்தம் அமைந்துள்ளதே?
பதில்: எனக்கே அது ஆச்சரியமாக இருக்கிறது.
கேள்வி: உங்களை அவர்’எப்படி அழைக்கிறார்?
பதில்: லட்ஷா’ என்று என் சொந்த பெயரை சொல்லி அழைக்கிறார்.
கேள்வி: திருமணம் முடிந்ததும் உடனே குழந்தை பெற்றுக்கொள்வீர்களா? அல்லது குழந்தை பிறப்பதை தள்ளிப்போடுவீர்களா?
பதில்: (வெட்கத்துடன்) எனக்கு அது தெரியாதுங்க!
கேள்வி: தேனிலவுக்கு எங்கே செல்கிறீர்கள்?
பதில்: எனக்கு பிடித்த நியூசிலாந்துக்கு செல்கிறோம் என்றார்.
Colombo Time
0 Response to "திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: ரம்பா"
Post a Comment