வாய்ப்பு கிடைத்தது எப்படி? அங்காடி தெரு நாயகன் பேட்டி
தமிழ் திரையுலகில் புதுமையான புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் அங்காடி தெரு படத்தைப் பற்றிய பேச்சுதான் ஒட்டுமொத்த தமிழகத்திலும். அதிலும் அங்காடி தெருவில் காட்டியிருக்கும் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரமாண்ட கடைகளில் எல்லாம் ஊழியர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? என்று சோதனை நடத்தப்பட்டிருப்பதால் பரபரப்பு மேலும் கூடியிருக்கிறது. படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது யார்? என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு படத்தில் நடித்திருக்கும் அத்தனைபேருமே இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
இதில் நாயகி அஞ்சலி ஏற்கனவே ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர்தான். கற்றது தமிழ் படத்தின் மூலம் நடிப்புத்திறமையை காட்டிய அஞ்சலி, அங்காடி தெருவில் அசத்தியிருக்கிறார். நாயகனாக நடித்திருக்கும் மகேஷ் புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். அங்காடி தெரு வாய்ப்பு கிடைத்தது எப்படி? சின்னாளப்பட்டியை சொந்த ஊராக கொண்ட மகேஷ் வாலிபால் பிளேயர். தமிழ்நாட்டுக்காக இரண்டு முறை விளையாடியிருக்கும் அவர், திருநெல்வேலியில் நடந்த டோர்ணமென்ட்டுக்காக சென்றிருக்கிறார். அப்போது டைரக்டர் வசந்தபாலன் கண்ணில் சிக்கிய மகேஷ், அங்காடித்தெருவின் நாயகனாகி விட்டாராம். வசந்தபாலன் சார் நடிக்க கூப்பிட்டதும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எனக்கு சினிமா பற்றி எதுவும் தெரியாது. இயல்பாக நடித்துள்ளதாக எல்லோரும் பாராட்டுறாங்க. இந்த பாராட்டு எல்லாமும் டைரக்டரைத்தான் சேரும். என்னிடம் நடிப்பை கண்டுபிடித்தவரும், அதனை எடுத்தவரும் அவர்தான். சினிமாவில் நடித்தது புது அனுபவமாக இருந்தது. இதுபோன்ற சிறந்த கதைகொண்ட படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன், என்கிறார் மகேஷ்.
அங்காடி தெருவில் சூப்பர்வைசர் அண்ணாச்சியாக நடித்திருந்த டைரக்டர் ஏ.வெங்கேடேஷ் தற்போது வல்லக்கோட்டை உள்ளிட்ட 2 படங்களை இயக்கி வருகிறார். வசந்தபாலன் வற்புறுத்தலின் பேரிலேயே அங்காடி தெருவில் நடித்ததாக கூறும் அவர், மற்ற படங்களில் நடிக்க வரும் வாய்ப்பை ஏற்க முடியவில்லை. டைரக்ஷன் மட்டுமே போதும் என்கிறார்.
Colombo Time
0 Response to "வாய்ப்பு கிடைத்தது எப்படி? அங்காடி தெரு நாயகன் பேட்டி"
Post a Comment