ஜோதிகாவிடம் இந்தி கற்றுக்கொண்ட சூர்யா!

"ரத்த சரித்திரா' இந்தி திரைப்படத்தில் நடிப்பதற்காக ஜோதிகாவிடம் இந்தி கற்றுக்கொண்டேன்" என்று நடிகர் சூர்யா கூறினார்.

சூர்யா முதல் முறையாக இந்தியில் நடிக்கும் திரைப்படம் 'ரத்த சரித்திரா'. இந்தியிலும் தமிழிலும் ஒரே சமயத்தில் எடுக்கப்படும் இந்தத் திரைப்படத்திற்கு தமிழில் 'ரத்த சரித்திரம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்தி இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கி வரும் இத்திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் சென்னையில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.


இதில் நடிகர் சூர்யா, இயக்குநர் ராம்கோபால் வர்மா, பாடலாசிரியர் நா. முத்துக்குமார், மற்றும் தமிழில் வசனம் எழுதியுள்ள ஞானவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நடிகர் சூர்யா பேசுகையில்,

"ராம்கோபால் வர்மாவின் படத்தில் நடிக்க எல்லா நடிகரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நானும் அவருக்காகவும், ரத்தசரித்திரம் கதைக்காகவும் படத்தை ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்துக்காக நான் ஜோதிகாவிடம் இந்தி கற்றுக்கொண்டேன். மேலும் மதுரையில் ஒரு வாத்தியாரிடமும் இந்தி பயின்றேன். நான் இதில் கதாநாயகனா என்று கேட்டால் இல்லைன்னு தான் சொல்லனும். கதைக்கேற்ற கதாபாத்திரம் என்று வேண்டுமானாலும் சொல்லலாம். நல்ல கேரக்டர்கள் வந்தால் நிச்சயமாகத் தொடர்ந்து இந்தித் திரைப்படங்களில் நடிப்பேன். மற்றபடி தமிழுக்குத்தான் முதல் முக்கியத்துவத்தை தருவேன்" என்ற சூர்யா ராம்கோபால் வர்மா குறித்து கூறுகையில்,


"அவர் ஆச்சரியமானவர். எனக்கும் ஜோதிகாவுக்கும் திருமணம் நடக்கும் முன்பே, ஜோதிகாவை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தவர் அவர். அப்பப்ப பேசிப்பேன். எங்கள் திருமணத்திற்கு கூட அவரை அழைத்தேன். வருவாரோ மாட்டாரோங்கிற என்கிற எங்க சந்தேகத்தை உடைக்கிறார்ப்போல் கல்யாண தினத்தன்று அதிகாலை 5 மணிக்கெல்லாம் வந்து வாழ்த்துச் சொன்னார்" என்றார் சூர்யா.

0 Response to "ஜோதிகாவிடம் இந்தி கற்றுக்கொண்ட சூர்யா!"

Post a Comment