அங்காடித் தெரு: ஒரு அருமையான காதல் கதை: பார்க்கவேண்டிய படம்
திருச்செந்தூர் ஏரியா. தேரிக்காடு. வறுமையின் முகவரியாக வாழ்கிற மக்கள். சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் பத்துமாடிக் கட்டிடமாக உயர்ந்து நிற்கிற செந்தில் முருகன் ஸ்டோர்ஸின் 'அண்ணாச்சி' யிடம் வந்து சேருகிறார்கள் வளமான வாழ்க்கையைத் தேடி! கொத்தடிமைகளாகிறார்கள். நரக வாழ்க்கையிலும் கேவலமான வாழ்க்கையை சகித்துக் கொண்டு வாழவேண்டிய அவலம்! இழிந்த வாழ்க்கையிலும் பூக்கிற காதல்! அதிலும் வலி! இதுதான் கதை.
இயக்குநர் வசந்தபாலனின் ஆண்மை மிகுந்த பதிவு. அண்ணாச்சியின் கோரத்தனத்துக்கு தி.நகரில் இருக்கிற அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பதும் ஈடாக மாதம்தோறும் கப்பம் பெறுவதும் அப்பட்டமாக பட்டியலுடன் தோலுரிக்கப்பட்டிருக்கிறது.
மனித உழைப்புக்கு அண்ணாச்சிக் கடையில் கிடைக்கிற 'மரியாதை'யை அஞ்சலியின் கன்றிப் போன உதடும் 'மாரை பிடிச்சுக் கசக்கிட்டான்' என்கிற ஒற்றை விசும்பல் வார்த்தையும் செவிட்டில் அறைந்து காட்டுகின்றன. மகேசும், அஞ்சலியும் அந்தந்த கேரக்டர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
காதலிப்பதா, இல்லை ஒதுங்கிப்போவதா, சூபர்வைசரின் கண்களில் பட்டுவிட்டால் எதிர்காலம் என்னாவது என்கிற தவிப்பில் லிங்கமும் சேர்மக்கனியும் அண்ணாச்சியின் நரகக்கடையில் வாழ்வதை பதிவு செய்திருக்கிற இயக்குநர் இரு புதுக்கவிதைகளையும் பதிவு செய்திருக்கிறார்.
குள்ள மனிதனும், ஏரியா இரவு ராணியும் புதுமை. "என்னைப்போல குள்ளமா பொறந்து கஷ்டப்படக்கூடாது" என்று கவலைப்படுகிற குள்ள மனிதரும், "நான் தட்டுவாணியா திரிஞ்சவ! இவருக்கு பிறக்கும் குழந்தை அவரை மாதிரியே குள்ளமா இருந்தால்தானே அவரோடு வாழ்வதற்கு பெருமை" என சந்தோஷப்படுகிற இரவு ராணியும் தியேட்டரில் கைதட்டல்களை அள்ளுகிறார்கள். "மனுசனை நம்பி கடை போட்டேன். அவர்கள் வாழ வைக்கிறார்கள்" என்கிற முதியவர் நம்பிக்கையின் வெளிப்பாடு. அண்ணாச்சியாக பழ.கருப்பையா! மனுஷன் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். பக்திக்குப் பின்னால் பதுங்கிக் கிடக்கிற அரக்கனை இவரளவுக்கு வேறு எவரேனும் வெளிப்படுத்த இயலுமா? சூபர்வைசராக வரும் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் பேசாமல் நடிக்க வந்து விடலாம். பல தயாரிப்பாளர்கள் பிழைத்துப் போவார்கள். சேர்மக்கனியின் சகோதரர் கேரக்டர் தொங்குசதை. தேவையில்லை.
அதிலும் கதாநாயகியின் கண்கள் காதல் பேசுவதில் பல இளைஞர்கள் தங்களை மறந்துபோனார்கள். திரிஷா, தமண்ணா, நம்மீதா போன்ற முன்னணி நட்சத்திரங்களைவிட இவர் நடிப்பிலும், காதல் பார்வையிலும் இளைஞர்களைச் சுண்டி இழுப்பதை யாரும் மறுத்துவிட முடியாது. காதல் எப்படி உருவாகும், அதன் ஸ்பரிசம், அதன் வலி எல்லாவற்றையும் பின்னியிருக்கிறார் டைரக்டர். படம் வெளிவர முன்னரே "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை" பாடலைக் கேட்ட எனது நண்பர், அப்படி என்றால் இந்தப் படத்தின் கதாநாயகி பெரிய அழகில்லை என நினைக்கிறே என்று கூறினார். பின்னர் படத்தை பார்த்துவிட்டு கவிஞ்ஞர் தான் பிழையாக எழுதிவிட்டார் என்று கூறுகிறார்.... அப்படி என்றால் ???
Colombo Time
0 Response to "அங்காடித் தெரு: ஒரு அருமையான காதல் கதை: பார்க்கவேண்டிய படம்"
Post a Comment