கோவா

சப் டைட்டில் சொல்கிற மாதிரியே இது வெங்கட் பிரபுவின் ஹா(கா)லி டே தான்!

எப்போதும் ஜாலி பண்ணியே பழகிய வெங்கட் பிரபு தமிழர்களால் அதிகம் உசுப்பேற்றப்பட்டதாலோ என்னவோ, கெக்கக் ‘Gay’ என்று சிரிக்க வைக்க முயல்கிறார். (ஸாரி பிரதர். இத உங்ககிட்டயிருந்து எதிர்பார்க்கலே) மற்றபடி முதல் சீனிலிருந்து முதல் பாதி வரை அடிக்கடி சரவெடி!


பண்ணைபுரத்தில் துவங்குகிறது கதை. உள்ளூர் கோவிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட பிரேம்ஜி, அவர்தம் நண்பர்கள் வைபவ், ஜெய் மூவரையும் பஞ்சாயத்தில் நிறுத்துகிறார்கள். அங்கு சொல்லப்படும் தீர்ப்பு பிரண்ட்ஷிப்புக்கு குண்டு வைக்கிறது. (காசு வெட்டி போட்ருவாங்களாம். அப்படின்னா? அதுக்கு பிறகு இந்த நண்பர்கள் சேரவே கூடாதாம்) வேறு வழியில்லாமல் ஊரைவிட்டு எஸ்கேப் ஆகிற அவர்கள், தனது கன்னங்கரேல் நண்பன் செக்கச் செவேல் வெள்ளைக்காரியோடு செட்டில் ஆவதை கண்டு அதிர்கிறார்கள். கோவாவுக்கு போனால் வெள்ளைக்காரியை லவ் பண்ணி வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்ற கனவோடு அந்த ஊருக்கு போனால்...?


நடக்கும் சம்பவங்களும், சங்கடங்களும் கலகலப்பும் கடுகடுப்புமாக படத்தை நகர வைக்கிறது. தம்மாத்துண்டு கதையில் பிரேம்ஜியிடம் ‘பிட்சா’ ருசி! ஜெய், வைபவ் இருவரும் தனி தனித்தனியாக போடுகிற காதல் டிராக்கிலும் கலகலப்பு.


கதையை பெரிதாக நம்பியதை விட பிரேம்ஜியின் அசட்டுத் தனத்தையே அதிகம் நம்பியிருக்கிறார் வெங்கட் பிரபு. அதுவும் சரிதான் என்பது போலவே அமைந்திருக்கிறது பிரேம்ஜியின் ரவுசு. வெள்ளைக்காரியை உருப்படியாக உஷார் பண்ணுவது இவர் மட்டும்தான் என்பதால், இவருக்கு கொஞ்சம் கூடுதல் அட்ராக்ஷன் கொடுக்க முயல்கிறார் வெங்கட். அதற்காக அவருக்கு நீலக்கலர் பெயிண்ட் அடித்து கிருஷ்ணராக உலவ வைப்பதெல்லாம் கண்ணை உறுத்துது சாமீய்... அடிக்கடி மைண்ட் வாய்சில் இவர் பாடும் ‘கண்கள் இரண்டால்...’ ஒரு கட்டத்தில் ஜவ்வடித்து போகிறது. ஜேம்ஸ் வசந்தன் இந்த பாடலுக்கு ராயல் டி கேட்காத வரைக்கும் விட்டு வைக்க மாட்டார்கள் போலிருக்கிறது.

ஜெய்-பியா ஜோடி காதலில் இழையோடும் குழப்பமும், மென்மையும் அழகான ஹைக்கூ. காதலில் விழுந்த பின்பும் வெள்ளைக்காரிக்காக காத்திருக்கும் ஜெய்யின் பிடிவாதம் உடையும் போது நமக்கும் ஒரு நிம்மதி. வைபவ்-சினேகா காதலில் அநியாயத்திற்கு உப்புமாத்தனம். அதுவும் அவ்வளவு பாதுகாப்பாக வைத்திருக்கும் நகையை வைபவ் அடித்துக் கொண்டு எஸ்கேப் ஆவதை சினேகா தனது பேவரைட் சிரிப்பால் மன்னிப்பது போங்கு ஆட்டம்! இந்த எபிசோடில் வந்து போகும் பிரசன்னா, சிம்பு இன்ப அதிர்ச்சியை தருகிறார்கள் ரசிகர்களுக்கு. அட, ஒரு சீனில் நயன்தாரா கூட! விசில் பறக்கிறது தியேட்டரில்.


ஐயர் கடை ஆப்பத்தில், ஆட்டுக்கால் பாயாவை சேர்த்த மாதிரி சம்பத்-அரவிந்த் கேரக்டர்கள். இரண்டு பேருக்கும் ஒரு டூயட் வேறு. கொடுமை! பிரேம்ஜியும் சம்பத்தும் பேசிக் கொண்டிருப்பதை அரவிந்த் ஒட்டுக் கேட்டு, அதை வேறு மாதிரி யூகித்துக் கொள்கிற காட்சி அதிபயங்கர அருவருப்பு.
வெங்கட் பிரபுவுக்கேயுரிய கடி ஜோக்குகள் ஆங்காங்கே தூவப்பட்டிருப்பதுதான் சீட்டுக்கு பக்கத்திலேயே கேன்ட்டீனை திறந்து வைத்த இன்பத்தை தருகிறது. ஒரு சாம்பிள்... மெதுவா சொல்லேண்டா என்று பிரேம்ஜி அதட்ட, சொன்ன வார்த்தையையே ஒவ்வொரு எழுத்தாக ஜெய் சொல்லும் அந்த காட்சி!

கோவாவுக்கு ஸ்பெஷல் ட்ரிப் அடித்த குளுமையை தருகிறது சக்தி சரவணனின் ஒளிப்பதிவு. யுவனின் இசையில் எல்லா பாடல்களும் அசத்தல்.
ஜெய், வைபவ், அரவிந்த் ஆகாஷ் இவர்களுடன் வெங்கட் பிரபு? இந்த கூட்டணிக்கு எதிரா கோடம்பாக்கத்திலே ஒரு அவசர பஞ்சாயத்தை கூட்டி யாராவது காசு வெட்டி போடுங்கப்போய்ய்ய்ய்ய்ய்

0 Response to "கோவா"

Post a Comment