ஷாம் : படித்து வாங்காத பட்டம்

நடிகர்கள் தங்களது பெயருக்கு முன்னால் புரட்சி, தளபதி என்று பட்டத்தை சேர்த்துக் கொள்வது தமிழ்நாட்டு வியாதி. இதெல்லாம் தேவையா என்று கேட்டால், ரசிகர்கள் ஆசைப்பட்டு வைத்தது என்று பழியை இன்னொரு பக்கம் பக்காவாக தள்ளிவிடுவதில் நடிகர்கள் கெட்டிக்காரர்கள்.


சமீபத்தில் வெறும் விஷாலாக இருந்தவர் புரட்சி‌த் தளபதி விஷாலாக மாறிய சம்பவம் நடந்தது. அதேபோல் பரத் சின்ன தளபதி பரத்தாக புரமோஷன் அடைந்தார். லிட்டில் சூப்பர் ஸ்டாராக இருந்த சிம்பு யங் சூப்பர் ஸ்டாராக தன்க்குத்தானே பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த சந்தடிகளுக்கு நடுவே ஜோசிய‌ரின் ஆலோசனைப்படி தனது அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை அ‌ஜித் துறந்த கதையும் நடந்தது.



நம் விஷயத்துக்கு வருவோம். இந்த பட்டப் பெயர் கும்பமேளாவில் ஷாமும் சேர்ந்திருக்கிறார். இனி இவர் வெறும் ஷாம் அல்ல, கிக் ஷாம். தெலுங்கில் இவர் நடித்த கிக் படம் பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படம் தற்போது தில்லாலங்கடி என்ற பெய‌ரில் தமிழில் ‌‌ரீமேக் செய்யப்படுகிறது. ஜெயம் ரவியுடன் ஷாமும் நடிக்கிறார்.



கிக் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சில தெலுங்கு வாய்ப்புகள் ஷாமுக்கு கிடைத்திருக்கிறது. அந்த நன்றிக் கடனுக்காகவா தெ‌ரியவில்லை, தனது பெயரை இனி படங்களில் கிக் ஷாம் என்று பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.



நல்லவேளை கிக் என்று பெயர் வைத்தார்கள், இதுவே பெக் என்று வைத்திருந்தால்...?

0 Response to "ஷாம் : படித்து வாங்காத பட்டம்"

Post a Comment