சிங்கள படத்தில் சூர்யா

மறுபடியும் மாட்டுகிறார் சூர்யா. முன்பு மாட்டியது வாய்க்கொழுப்பினால். இப்போது மாட்டப்போவது தேவையில்லாமல் கொடுத்த கால்ஷீட்டினால். கோடம்பாக்கத்தை குலுங்க வைக்கப் போகும் அந்த தகவல் இதுதான்.


தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு எதிராகவும், சிங்களர்களுக்கு எதிராகவும் பல வருடங்களாக குரல் கொடுத்து வருகிறது தமிழகம். சில மாதங்களுக்கு முன் தமிழர்களுக்கு எதிராக படம் எடுத்து அதை சென்னையில் உள்ள லேப்பில் பிரிண்ட் போட வந்த சிங்கள இயக்குனர் ஒருவருக்கு அடி-உதை விழுந்ததெல்லாம் கூட சூர்யாவின் காதுகளுக்கு எட்டவில்லை போலும். சிங்கள இயக்குனர் சுரேஷ் குமார் சிங்கை என்பவர் இயக்கப் போகும் சிங்கள படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். படத்தின் பெயர் தேவதாசி என்றும் சொல்லப்படுகிறது.




சூர்யா-சிம்ரன் இருவரும் இணைந்து நடிக்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் இலங்கையில் துவங்குகிறதாம். சிங்களன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க தமிழரான சூர்யா எப்படி ஒப்புக் கொண்டார் என்று தெரியவில்லை. ஒருவேளை இந்த படத்தில் அவர் நடித்தால் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது இந்து மக்கள் கட்சி.



வீட்டுக்கு அடங்காத பிள்ளை ஊருக்கு அடங்குமாம்!

மீண்டும் கவர்ச்சி பக்கம் காஜல்

தெலுங்கில் அதிரடி கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி பின்னர் அடக்கியே வாசி்த்த காஜல் அகர்வால் இப்போது மீண்டும் கவர்ச்சி பக்கமே தாவிவிட்டார்.


தெலுங்கில் படு கவர்ச்சியாக இவர் நடித்த சில படங்களால் கோலிவுட்காரர்களின் கண்ணில் பட்டவர் காஜலல். தொடர்ந்து பழனி, பொம்மலாட்டம், மோதி விளையாடு என அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.



தமிழில் நடிக்க ஆரம்பித்ததும் தெலுங்கிலும் கவர்ச்சியை கொஞ்சம் கைவிட்டுவிட்டு நல்ல கதைகளைத் தேடி நடித்தார். ஆனால், அப்படி இவர் நடித்த எந்தப் படமும் எடுபடவில்லை. தமிழும் கை கொடுக்கவில்லை.



இந் நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி மகனுடன் இவர் நடித்த மஹாதீரா ஆந்திராவில் செம ஹிட். இதற்கான காரணங்களில், காஜலின் ஹாட் கவர்ச்சியும் ஒன்று.


இதனால் காஜல் காட்டில் மீண்டும் அடைமழையாக வாய்ப்புகள். இதையடுத்து மீண்டும் முழு கவர்ச்சிக்கு தயாராகிவிட்டாராம். தமிழிலும் விரைவில் இதே கவர்ச்சி ஆயுதத்துடன் மீண்டும் குதிப்பாராம்.

அபிஷேக்குடன் நடிக்க மறுத்த அசின்!

லண்டன் ட்ரீம்ஸ் படத்துக்குப் பிறகு அபிஷேக் பச்சனுடன் நடிக்கவிருந்தார் நடிகை அசின். இப்போது அந்தப் படத்திலிருந்து விலகிக் கொண்டதாக அறிவித்துள்ளார்.


லகான், ஜோதா அக்பர் படங்களை இயக்கிய அசுதோஷ் கோவாரிகர் இந்தப் படத்தை இயக்குவதாக அறிவிக்கப்படிருந்தது. 'கேலேங்கே ஹம் ஜீ ஜான் ஸே' எனத் தலைப்பிடப்பட்ட இந்தப் சரித்திரப் படம் பெரும் எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களுள் ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது.



இதில் அபிஷேக் பச்சன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அசின் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் கடந்த மாதம் கையெழுத்திட்டார் அசின்.



படத்தை அசுதோஷ் இயக்குகிறார் என்றதும் கதை பற்றியெல்லாம் எதுவும் கேட்காமல் கையெழுத்துவிட்டாராம். ஆனால் ஸ்கிரிப்டை முழுமையாகப் படித்துப் பார்த்த அசினுக்கு அதில் திருப்தி இல்லையாம் (இதான் அசுதோஷின் போதாத காலம் என்பது!). அதனால் இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்ள முடிவெடுத்த அசின், கால்ஷீட் பிரச்சினை என்ற வழக்கமான காரணம் கூறி விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.



இப்போது அந்த வேடத்துக்கு கரீனா கபூர், ப்ரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோன் தீவிரப் போட்டியில் இறங்கிவிட்டார்களாம். இன்னொரு பக்கம், பாலிவுட்டுக்கு இன்னுமொரு புதிய முகத்தை நாயகியாக அறிமுகப்படுத்தும் நோக்கில் புதிய இளம் பெண்களை நேர்காணல் செய்துவருகிறாராம் அசுதோஷ் கோவாரிகர்.

நயன்தாரா போ போ... ஸ்ருதியே வா...வா...

சென்னைக்கு வந்தால் கூட, நைசாக வந்து சைசாக எஸ்கேப் ஆகிவிடுகிறார் நயன்தாரா. (திருமதிக்கு பயந்துதான் செல்வியின் எஸ்கேப்)


இந்த லட்சணத்தில் ஜெயம் ரவி நடிக்க, பிரபுதேவா இயக்கும் படத்தில் தன்னையே ஹீரோயினாக போட வற்புறுத்தி வருகிறார் என்று எழுதியிருந்தோம். இதற்கு ஜெயம் ரவியும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நிலையில்தான் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி ஆச்சர்யத்தை தந்திருக்கிறார் பிரபு.


கமலின் மகள் ஸ்ருதியை ஜெயம் ரவிக்கு ஜோடியாக புக் பண்ணியிருக்கிறாராம். இந்தியில் அறிமுகமாகி முதல் படத்திலேயே தோல்வி கண்ட ஸ்ருதி, மீண்டும் இந்திக்கு சென்று வெற்றி பெறாமல் திரும்ப போவதில்லை என்றெல்லாம் பேசி வந்தார். இதற்கிடையில் பிரபுதேவாவின் அழைப்பு அவரை தமிழ் சினிமா பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. இந்த அழைப்பை மதித்து கால்ஷீட் கொடுத்தால் இந்தியில் நம்மை வைத்து படம் எடுப்பார் என்றும் எண்ணியிருக்கலாம்.



தனது மகள் தமிழில்தான் அறிமுகம் ஆக வேண்டும் என்று விரும்பியவர் கமல். ஆனால், மகளது விருப்பம் பாலிவுட்டை நோக்கி இருந்ததால் அதற்கும் சம்மதம் தெரிவித்தவர், இந்த வாய்ப்பை மனதார வரவேற்கிறாராம். படத்திற்கு பாரீஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அப்போ ஷ§ட்டிங்கும் அங்கதானே நடக்கும்?

புதுமுகங்கள் நடிக்கும் படம்

வர வர நம் இயக்குநர்கள் போகிற போக்கில் படங்களுக்குப் பெயர் வைத்துவிட்டுப் போய்விடுகிறார்கள். அட்டு என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். இதற்கு தமிழ் விளக்கத்தையும் அவர்களே தருகிறார்கள்.


அட்டு என்றால் யாருக்கும் அடங்காதவன் என்பதுதான் பொருளாம். அப்படி யாருக்கும் அடங்காத ஒருத்தனைப் பற்றிய கதையை பிலிமுக்குள் அடக்கப் போகிறோம்... என்று மார் தட்டாத குறையாக பேசிக்கொள்கிறது இந்தப் படக்குழு. படத்தை இயக்குபவர் ஸ்டீவன். இவர் ஏற்கனவே பல விளம்பரங்களையும் குறும்படங்களையும் இயக்கியுள்ளார். இப்போது, இந்தப் படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார். படத்தில் நடிப்பவர்கள் எல்லாருமே புதுமுகங்கள். (அதுதானே இப்போது லேட்டஸ்ட் டிரண்ட்) போபோ சசி இந்தப் படத்திற்கு இசை அமைக்கிறார். ஆண்ட்ஸ் ஒர்க்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. படங்களுக்குப் பெயர் வைக்கும் போதே அதற்கான பொருளையும் நம் இயக்குநர்கள் சொல்லி விடுவதால் தமிழ் படங்களுக்கு அளிக்கப்படும் சலுகையை இந்தப் படங்கள் மிஸ் பண்ணுவதில்லை...

சிக்கலில் விண்ணைத்தாண்டி வருவாயா கிளைமாக்ஸ்

ஒரு காட்சியாவது அமெ‌ரிக்காவில் எடுக்க வேண்டும் என்பது கௌதமின் சென்டிமெண்டாகிவிட்டது. வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்களைத் தொடாந்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் கிளைமாக்ஸையும் அமெ‌ரிக்காவில் எடுத்துள்ளார்.


அமெ‌ரிக்காவின் நியூயார்க் நக‌ரில் சிம்பு, த்‌ரிஷா இடம்பெறும் காட்சிகளை கௌதம் படமாக்கினார். படப்பிடிப்பு முடிந்து விண்ணைத்தாண்டி வருவாயா டீம் சென்னை திரும்பிவிட்டது.



கிளைமாக்ஸின் சில காட்சிகளை திட்டமிட்டபடி அவர்களால் நியூயார்க்கில் எடுக்க முடியவில்லையாம். அதனால் அந்தக் காட்சிகளை சென்னையில் எடுத்து மேட்ச் செய்யவிருக்கிறார்கள்.



வேட்டையாடு விளையாடு படத்தின் பல காட்சிகள் இப்படி சென்னையில் ஷூட் செய்து அமெ‌ரிக்க காட்சிகளுடன் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சட்ட ‌ரிதியாக சந்திப்பேன் - விஜய்

வீட்டு வசதி வா‌ரியத்திடமிருந்து விஜய் வாங்கிய நிலம் தொடர்பாக விஜய்க்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுபற்றி விஜய் சார்பாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம் அளித்துள்ளார்.


உதயம் திரையரங்குக்கு எதிரே உள்ள நிலத்தை வீட்டு வசதி வா‌ரியம் ஏலம் விட்டது. அந்த நிலத்தை ஏலத்தில் வாங்கி விஜய் ஜோசப் என்ற எனது சொந்த பெய‌ரில் ‌ப‌திவு செய்தேன். ஆனால், அதற்கு அருகில் இருக்கும் திருமண மண்டபத்தையும் நான் வாங்கிவிட்டதாக சிலர் புரளி கிளப்புகிறார்கள்.


நான் வாங்கிய இடத்தில் பறக்கும் ரயில் திட்டம் வர இருப்பதால் அதற்குப் பதிலாக வேறு இடத்தை வீட்டு வசதி வா‌ரியம் அளித்தது. அதில்தான் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அதனை நான் சட்ட‌‌‌ப்படி எதிர்கொள்வேன்.


இவ்வாறு அந்த விளக்கத்தில் கூறப்பட்டிருந்தது.


விஜய்க்கு தேசிய அளவில் புகழ் அதிக‌ரித்து வருகிறது. அதை பொறுக்க முடியாத சிலர் கிளப்பிவிடும் வீண் வதந்திகள் இவை என்று தெ‌ரிவித்தார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

தேறுவாரா சாந்தனு

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தன் மகனை வைத்துத்தான் தொடர்ந்து படங்களை எடுத்தார். சில படங்கள் இவ்வாறு இயக்கி வெளியிட்ட பின்னரே மற்றவர்கள் விஜய்யை வைத்து இயக்க ஆரம்பித்தார்கள்.


இந்த பாலிசியை பின்பற்றுகிறாரோ என்னவோ பாக்கியராஜ், தன் மகனை வைத்து ‘சித்து +2’ என்ற படத்தை எடுத்துவிட்டார். பாக்யராஜின் டேஸ்ட்டுக்கு படம் இருக்கும் என்று எதிர்பார்த்தால் சாந்தனு படப்பிடிப்பில் ஏகப்பட்ட மாற்றங்களை செய்துவிட்டாராம். ஆனாலும் படம் நன்றாகவே வந்திருக்கிறது என்று சித்து டீம் சொல்கிறது. சாந்தனு அறிமுகமான சக்கரக்கட்டி சொதப்பல் படமாகி விட்டது. அவன் மகளும் ஒரு படத்தில் நடித்ததோடு தமிழ் சினிமா அவருக்கு வி.ஆர்.எஸ். கொடுத்துவிட்டதால், தன் மகனை எப்படியாவது இந்தப் படத்தின் மூலம் முன்னுக்குக் கொண்டு வந்து நிலைநிறுத்திவிட வேண்டும் என்று துடியாக துடிக்கிறார் பாக்யராஜ். எல்லாம் ரசிகர்கள் கையில்தான் இருக்கிறது.

ஆதி மேல் கடுப்பில் சாமி

‘மிருகம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் ஆதி. இந்தப் படத்தை இயக்கியர் சாமி. ஆதியின் நடிப்புத் திறமையை இந்தப் படத்தின் மூலமாக முழுவதுமாக வெளிக்கொண்டு வந்ததால் இந்தப் படம் பரவலாகப் பேசப்பட்டது.


இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தான் இயக்கவிருக்கும் அடுத்தப் படத்திற்குக் கால்ஷீட் கேட்டார் சாமி. ஆனால் ஆதியோ மறுத்துவிட்டார். அவர் கேட்ட நாட்களை ‘ஈரம்’ படத்திற்கு ஒதுக்கிக் கொடுத்தார். ஈரமும் ஓரளவு ஓடிவிட்டதால் இப்போது பிஸியாகிவிட்ட ஆதி, ‘சரித்திரம்’, ‘அய்யனார்’ படங்களில் பிஸியாக உள்ளார். இதைத் தொடர்ந்து ‘நாடோடிகள்’ படத்தைத் தயாரித்த மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் படத்திலும் நடிக்க உள்ளார் ஆதி. அறிமுகப்படுத்திய தனக்கு கால்ஷீட் தராமல் மற்ற கம்பெனிகளுக்கு கால்ஷீட் கொடுப்பது சாமிக்கு ஏகத்துக்கும் கடுப்பைக் கிளப்பிவிட்டுள்ளது. பற்களை நறநறவென கடித்தபடி வலம் வருகிறார் சாமி.

நரேன் படத்தில் மீனா

பூக்கடை ரவி படத்துக்குப் பிறகு நரேன் நடிக்கும் படம், தம்பிக்கோட்டை. அம்மு ரமேஷ் என்பவர் இதை இயக்குகிறார்.

இவர் ஜெயம் ராஜாவிடம் உதவியாளராக பணியாற்றியவர். பூனம் ப‌ஜ்வா நரேன் ஜோடியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர்களுடன் பிரபு, வடிவேலு ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள். மலையாளத்தில் திருமணத்துக்குப் பிறகும் ஹீரோயினாகவே நடித்து வருகிறார் மீனா. தமிழ் சினிமாவுக்கு அந்தளவு தாராள மனசு கிடையாது.
தம்பிக் கோட்டையில் மீனாவை நரேனுக்கு அக்காவாக்கியிருக்கிறார்கள். படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். வரும் டிசம்பர் படப்பிடிப்பு தொடங்குகிறது.

ஆஸ்கர் தயா‌ரிப்பில் விஜய்


விஜய்யின் 51வது படத்தின் தயா‌ரிப்பாளர், இயக்குனர் யார் என்பதற்கான விடை கிடைத்திருக்கிறது.

விஜய் தற்போது சுறா படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 50வது படம். இதையடுத்து அவர் யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது கேள்விக்குறியாக இருந்தது.



ஜெயம் ராஜாவிடம் கதை கேட்ட விஜய், கண்டிப்பாக படம் பண்ணுவோம் என அவ‌ரிடம் உறுதி அளித்திருந்தார். 49வது படமான வேட்டைக்காரன் தொடங்கிய போதே உறுதி செய்யப்பட்ட விஷயம் இது.



இந்நிலையில் லிங்குசாமியும் விஜய்க்காக கதை தயார் செய்து வைத்திருக்கிறார். விஜய் கால்ஷீட் கொடுத்தால் பையாவுக்குப் பிறகு விஜய் படத்தை இயக்கலாம் என்பது லிங்குசாமியின் எண்ணம். ஆனால், முன்பே திட்டமிட்டபடி ஜெயம் ராஜா இயக்கும் படத்தில் நடிப்பதென்று விஜய் முடிவு செய்துள்ளார். இந்தப் படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயா‌ரிக்கிறார். படத்துக்கு இசையமைக்க பலரது பெயர்கள் ப‌ரிசீலனையில் உள்ளன. என்றாலும் தரணின் பெயர்தான் விஜய்யின் சாய்ஸாம். ஈரம் படத்தில் தரணின் இசை விஜய்க்கு பிடித்திருந்ததுதான் இதற்கு காரணமாம்.

ஜாக்கிசானை வைத்து படம் - ஆஸ்கார் பிலிம்ஸ்

'வானத்தை போல', 'தசவதாரம்' போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் அடுத்து இந்திப் படத்தைத் தயாரிக்க பாலிவுட் போவார் என்று நாம் நினைத்தால் மனிதர் ஹாலிவுட்க்கு ஃபிளைட் பிடித்து விட்டார்.

இவர் தயாரிப்பில் ஆங்கிலப் படம் ஒன்று உருவாக்கவிருக்கிறது. 200 கோடி ரூபாயில் இந்த படம் தயாராகும் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிப்பவர் ஜாக்கிசான். தமிழிலேயே ரூ100 கோடி ரூ150 கோடியில் பல படங்கள் வந்து கொண்டிருக்க ஆங்கிலத்தில் 200 கோடியில் தயாரிப்பது ஆச்சரியம் தருகிறது... ஒருவேளை தமிழில் வெளிவரும் பட்ஜெட் படங்கள் போன்று இந்தப் படமும் ஆங்கிலத்தில் பட்ஜெட் படமாக இருக்கலாம்...

ஜாக்கிசானுக்கு யார் ஜோடி... மல்லிகா ஷெராவத்தாக இருக்குமோ...?

அடுத்த படத்துக்கு கதை ரெடி - இயக்குநர் பாண்டிராஜ்

'பசங்க' என்னும் வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் பாண்டிராஜ். புதுமுங்களை வைத்து இவர் எடுத்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்தப் படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.


‘சிறுவர்களுக்குள் இருக்கும் போட்டிகள், பொறாமைகள் எல்லாம் ஒவ்வொரு மனித வாழ்க்கையி்லும் நடக்கும் சம்பவங்கள். அது ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய சிறுவயது ஞாபகங்களை வரவழைப்பதாக இருந்தது’ என்று நிறையபேர் பாண்டிராஜை பாராட்டிவிட, மனிதர் ஏகப்பட்ட சந்தோஷமாகிவிட்டார். ‘என்னுடைய அடுத்த படத்தையும் நன்றாக எடுத்து 'பசங்க' படத்தின் மூலம் கிடைத்த பெயரை தக்கவைத்துக்கொள்வேன். என்னுடைய அடுத்த படத்தின் கதையை நான் என்னுடைய சொந்த ஊரில் இருந்தே எழுதி வருகிறேன். இப்போது எடுக்கப்போகும் படம் 'பசங்க' படத்திலிருந்து மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். இதிலும் சில புதுமுகங்களை அறிமுகப்படுத்தப் போகி்றேன். இந்தப் படம் நகைச்சுவை படமாக இருக்கும். இந்த படத்தி்ன் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கும்.’ என்கிறார் பாண்டிராஜ்.

இறங்கி வந்த பாலா இழுத்துப் பிடித்த ஆர்யா, விஷால்!

கயிறை விட்டுட்டு கைய பிசையுற வேலை இனி நடக்கவே நடக்காது. அந்தளவுக்கு மற்றவங்களுக்கு அனுபவத்தை கற்றுக் கொடுத்திருக்கிறார் பாலா.

விஷால், ஆர்யா நடிக்கும் பாலாவின் புதிய படத்தில் நடிக்க போவதற்கு முன்பே அக்ரிமென்ட் பக்காவாக இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாம். அதன்படி முதலில் கதையை சொல்லுங்க என்று இரண்டு பேரும் பாலாவிடம் கேட்க, அவரும் இருவரையும் உட்கார வைத்து முழு கதையையும் சொல்லி அசத்தினாராம்.


படப்பிடிப்பு எப்போது துவங்கும்? எப்போது முடியும்? எப்போ ரிலீஸ்? பட்ஜெட் எவ்வளவு? இது எல்லாவற்றையும் முறையாக எழுதி கையெழுத்து போட்டுக் கொடுத்துவிடுங்கள் என்று தயாரிப்பாளர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட அதற்கும் தயாராக இருந்தார் பாலா. அதன்படி தயாரான அக்ரிமென்ட்டில் ஜனவரி 25 ந்தேதி படப்பிடிப்பை ஆரம்பித்து ஜுன் 5-ந் தேதிக்குள் முடித்துவிடுவதாக கையெழுத்திட்டாராம். ஆகஸ்ட் 15 ந் தேதி ரிலீஸ் தேதியையும் குறித்துக் கொடுத்திருக்கிறாராம்.



முழுக்க முழுக்க மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் படம் வளர இருக்கிறது. முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கு பெறப்போகிறார்கள். இந்த படத்தையாவது வில்லங்கமில்லாமல் முடித்து தர வேண்டும் என்று நிஜமான அக்கறையோடு களத்தில் இறங்கியிருக்கிறாராம் பாலா.



நல்லதே நடக்கட்டும்...

நயன்தாரா வேண்டாம்... அலறும் சல்மான், ஜெயம் ரவி

வடக்கே தலையை காட்டு... தெற்கே தீயை மூட்டு...ங்கிற மாதிரி பரபரப்பா இயக்கிக் கொண்டிருக்கிறார் பிரபுதேவா. இந்தியில் வாண்டட் படத்தின் ஹிட்டை தொடர்ந்து சல்மான்கானை வைத்து மோஸ்ட் வாண்டட் என்ற படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார்.


இதில் நயன்தாராவை சல்மானுக்கு ஜோடியாக்கிவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். அப்படியே தமிழில் ஜெயம் ரவியை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறாராம். இங்கேயும் நயன்தாராவை ரவிக்கு ஜோடியாக்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டாராம். (ம்ம்க்கூம்...)



அலாவுதீன் கண்ணுக்கு வேணும்னா பூதமே ஃபிகரா தெரியலாம். அடுத்தவங்களுக்கு தெரியணுமா என்ன? “வேண்டாம், ஆளை விடுங்க” என்று அலறுகிறார்களாம் சல்மான்கானும், ஜெயம் ரவியும். சல்மான் கேட்பது அசினை. ஜெயம் ரவியோ, யாரை வேணும்னாலும் ஜோடியா போடுங்க. ஆனால் நயன்தாரா வேண்டாம் என்கிறாராம். இதில் பயங்கர அப்செட்டாகியிருக்கிறார் பிரபுதேவா.


சல்மான்கானிடம் சண்டை போட முடியாது. ஆனால் ஜெயம் ரவி விஷயத்தில் அப்படியல்ல. “நயன்தாராதான் ஹீரோயின். இல்லைன்னா இந்த படமே வேண்டாம்” என்று மிரட்டுகிறாராம். பேராண்மை ஹிட்டுக்கு பிறகு ஜெயம் ரவியை கொண்டாட தயாராக இருக்கிறது தமிழுலகம். பிரபுதேவா இல்லென்னாலும் என்னால நல்ல படத்தை செலக்ட் பண்ண முடியும் என்கிற அளவுக்கு போயிருக்கிறாராம் ரவி.



பெண்ணால சில சமஸ்தானங்களே உடைஞ்சிருக்கு. பாவம் பிரபுதேவா...

வெங்கட்பிரபுவின் புதிய தயா‌ரிப்பாளர்

வெங்கட்பிரபு அ‌ஜித் படத்தை இயக்குவாரா என்பது இன்னும் ‌விடை தெ‌ரியாத கேள்வியாகவே இருக்கிறது.


அதே நேரம் கோவா படத்துக்குப் பிறகு அவர் இயக்கும் படத்தை யார் தயா‌ரிக்கிறார்கள் என்பது முடிவாகியிருக்கிறது. சென்னை 28, சரோஜா வெற்றிக்குப் பிறகு வெங்கட்பிரபுவை மொய்ப்பவர்கள் அதிகம். தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் கோவா படமும் நிச்சயம் வெற்றி பெறும் என்பதால் பிரபுவின் மார்க்கெட் வேல்யூ ஏறிக் கொண்டே போகிறது.



கோவாவுக்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கும் படத்தை அம்மா கி‌ரியேஷன்ஸ் சிவா இயக்குகிறார். சென்னை 28க்குப் பிறகு உடனடியாக சரோஜா படத்தை இயக்க வாய்ப்பு வழங்கியவர் சிவா என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிலவரப்படி தனது வழக்கமான டீமை வைத்தே இந்த புதிய படத்தையும் எடுக்க திட்டமிட்டிருக்கிறார் வெங்கட்பிரபு.

மாசி... மாஸ் படம்

ஜி.கிச்சா இயக்கத்தில் அர்ஜுன் நடிக்கும் மாசியில் அவருக்கு போலீஸ் அதிகா‌ரி வேடம்.

படம் பற்றி கேட்டால், அர்ஜுன் ஆச்ச‌ரியமாகச் சொல்லும் ஒரு விஷயம், “இதுவரை ஆ‌க்சன் ஹீரோவா நடிச்சேன். இதில் முதல் முறையா எதி‌ரிகளுடன் மசில் ஃபவருடன் மோதாமல் மைண்ட் பவரை யூஸ் பண்றேன். ஏதி‌ரிகளை எப்படி புத்திசாலித்தனத்தால் வீழத்துகிறேன் என்பது ஹைலைட்டாக இருக்கும்.


” ஆ‌க்சன் கிங் அறிவை வைத்து விளையாடுவது ச‌ரிதான். ஆனால், அவரது ரசிகர்க‌ள் இதை ஏற்றுக் கொள்வார்களா? அந்த சந்தேகம் இயக்குனருக்கும் இருக்கும் போலிருக்கிறது. அதனால், இருக்கிற ஒன்றிரண்டு சண்டைகளை பிரமாண்டமாக எடுத்திருக்கிறார்.



அதிலும் கிளைமாக்ஸ் சண்டை மிகப் பிரமாண்டம். அர்ஜுன் பொன்னம்பலத்துடன் மோதும் இந்தக் காட்சியில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களுடன் 600 கார்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த சண்டைக் காட்சியை படமாக்க பயன்படுத்தப்பட்டவை ஏழு கேமராக்கள். தமிழ் சினிமா ச‌ரித்திரத்தில் இது முதல்முறை.
இதே கிச்சா சினேகாவை வைத்து பவானி ஐபிஎஸ் படத்தை இயக்கி வருகிறார், அதுவும் ஒரே நேரத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

அகராதி கதை என்ன?

வர்னிகா மூவி மேக்கர்ஸ் சார்பில் டி.வரத், சுமதி கல்யாணசுந்தரம் தயாரிக்கும் படம் அகராதி. நாகா வெங்கடேஷ் டைரக்ட் செய்கிறார். படம் பற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது:அகராதி என்றால் டிக்ஷனரி என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.


ஆனால் இப்படத்தை பொறுத்தவரை அன்பு, கடமை, ராஜ்யம், தியாகி ஆகியவற்றின் முதல் எழுத்தை சுருக்கித்தான் அகராதி என்று வைத்திருக்கிறோம்.

கொலை சம்பவம் ஒன்றில் துப்பறிய வில்லன்போல் வேலைகளை செய்கிறார் ஹீரோ பிரதீப். இரவில் ஒரு வானவில் என்று ராஜேஷ்குமார் எழுதிய நாவலே இப்படம்.

நாவலின் முடிவில் ஹீரோவை பற்றி சொல்லியுள்ள கருத்தை, படத்தில் காட்ட முடியாது என்பதால் சஸ்பென்ஸாக விடப்படுகிறது. ஒரேயரு பாடல் காட்சிக்கு கீர்த்தி சாவ்லா, பாலா நடித்திருக்கின்றனர். வழக்கறிஞராக நடித்திருக்கிறார் நேத்ரா. இப்படம் புதுடிரெண்ட்டை ஏற்படுத்தும்.

பேரன் பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாடிய ரஜினி!

ரஜினியின் பேரன் யாத்ராவின் முதல் பிறந்த தினம் போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டில் அமர்களமாகக் கொண்டப்பட்டது.


தனுஷ்-ஐஸ்வர்யாவின் மகனுக்கு முதல் பிறந்தநாள். முக்கிய உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அழைப்பிதழ் அடித்து வரவேற்பு கொடுத்த ரஜினி, அனைவரையும் தானே வரவேற்று உபசரித்து மகிழ்ந்ததை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர் சக கலைஞர்கள் மற்றும் நண்பர்கள்.

"தனது பிறந்தநாளை பெரிதாக கொண்டாட விரும்பாதவர் ரஜினி. ஆனால் தனது மகள் வழிப் பேரனுக்கு அவர் பிறந்த நாள் கொண்டாடிய விதம் வந்திருந்தவர்களை ஆச்சர்யப்படுத்தியது.

குழந்தைக்கு ஏராளமான பரிசுப் பொருட்களை வாங்கிக் குவித்த ரஜினி , சூழ்நிலையையே மறந்து, குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தாராம்.

மன்னிப்பு கேட்ட ரம்பா

கலைஞரின் கதை வசனத்தில் உருவாகும் பெண் சிங்கம் படத்தின் தலைப்பை விரைவில் மாற்றப் போகிறார்களாம். இதற்கிடையில் அப்படத்தில் நடித்து வந்த ரம்பா, கால்ஷீட் சொதப்பியதால் நீக்கப்பட்டிருக்கிறார். ஏன்?


எலிக்கு எட்டு முழம் வேட்டி கிடைச்சா என்னாகும்? அதுதான் என்கிறார்கள். தமிழ்சினிமாவிலிருந்து அநேகமாக ரிட்டையர் ஆக வேண்டிய நேரத்தில் அவருக்கு கிடைத்திருக்கும் அந்தஸ்துதான் கால்ஷீட் சொதப்பலுக்கே காரணம் என்கிறார்கள். கனடாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஒன்று ரம்பாவை பிராண்ட் அம்பாசிடராக நியமித்துள்ளதாம். இதன் காரணமாக அடிக்கடி கனடாவுக்கு விசிட் அடிக்கும் ரம்ஸ், சொன்ன நாளில் படப்பிடிப்புக்கு வருவதில்லையாம்.


பொறுத்து பொறுத்து பார்த்த டைரக்டர் பாலி, “உங்களால வர முடியலேன்னா சொல்லிருங்களேன்” என்று உதார் விட, இதற்காகவே காத்திருந்தாரோ என்னவோ, “நான் வரலே” என்று கூறிவிட்டாராம். ஆனால், இந்த அசந்தர்பங்களால் முதல்வர் மனசு நோகக் கூடாதே என்பதால் அவரையும் பார்த்து தனது நிலையை விளக்கி மன்னிப்பும் கேட்டு விட்டாராம். இப்போது அவருக்கு பதிலாக பொறுத்தமான வேறொரு நாயகியை தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.

தோளில் கை போட்ட சூப்பர் ஸ்டார் - பரவசப்படும் ஆட்ட நாயகன்

மீண்டும் இயக்குனராகிறார் லாரன்ஸ். அநாதை ஆசிரமம், இருதய நோயாளிகளுக்கு வாழ்வு, ராகவேந்திரா கோவில் என்று பல்வேறு சமுதாய, ஆன்மீக பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், இயக்குனர் ஆசையை விடவே இல்லை அவர்.


தெலுங்கில் சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய லாரன்ஸ், தமிழில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார். இவரேதான் அதில் ஹீரோ என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.


புதுப்படம் எது மாதிரியான கதையமைப்பு கொண்டது என்பதையெல்லாம் பிறகு அலசுவோம். முதலில் அவர் முடிவெடுத்திருக்கிற விஷயம்... ரஜினி போலவே மேனரிசம் செய்வதை இந்த படத்திலாவது விட வேண்டும் என்பதுதானாம். பாண்டி படத்தை பார்த்த பலரும் லாரன்சிடம் அப்படியே ரஜினியை காப்பியடிக்கணுமா? உங்களுக்குன்னு தனி ஸ்டைல் வேண்டாமா? என்றார்களாம். யோசித்து பார்த்த லாரன்ஸ் அதுவும் சரிதான் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.



எந்திரன் படத்தில் ஒரு பாடலை ரஜினிக்காக டான்ஸ் கம்போஸ் செய்திருக்கிறார். படப்பிடிப்பில் அவரை ஆட்டி வைத்தாலும், ஆஃப் லைட்டுக்கு பின்னே பம்மிக் கொண்டு நிற்பாராம் சூப்பர் ஸ்டாரிடம். “படக்குன்னு தோளில் கை போட்டு பேசுவாரு. அப்படியே ஆடிப் போயிருவேன். அந்த நேரத்திலே உடம்பெல்லாம் மின்சாரம் ஓடினா மாதிரி இருக்கும். அந்த ஃபீலிங் இருக்கே... அது தனி” என்று சொர்கத்துக்கே போகிறார் ரஜினி பற்றி பேசினால். சென்னையில் எட்டு கிரவுண்டில் கட்டி வரும் மந்த்ராலயத்தை எப்போ திறக்கப் போறீங்க என்றால், “ரஜினி சார் ஒரு கரெக்ஷன் சொல்லியிருக்காரு. அதை செஞ்சுகிட்டு இருக்கோம். அது முடிந்ததும் தலைவர் கையால திறந்திட வேண்டியதுதான்” என்றார் லாரன்ஸ். அவர் சொன்ன தலைவர்? ...



ரஜினியேதான்!

கடவுள் நம்பிக்கையே என் பலம்; யாருக்கும் பயப்பட மாட்டேன் -நயன்தாரா

பிரபுதேவா, நயன்தாரா காதலுக்கு எதிர்ப்பும், அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன. நயன்தாராவை பார்த்தால் அடிப்பேன் என்று பிரபுதேவா மனைவி ரம்லத் எச்சரித்தார். இதனால் காதலை முறித்து விட்டு நயன்தாரா விலகி விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முன்பை விட காதலில் தீவிரம் காட்டுவதாக நெருக்கமானவர்கள் முணுமுணுக்கிறார்கள்.


சமீபத்தில் சென்னையில் நடந்த சினிமா தொழிலாளர் மாநாட்டில் தைரியமாக பங்கேற்றார். டெலிவிஷன் பேட்டி ஒன்றில் பிரபுதேவா பெயரை கையில் பச்சை குத்தியிருப்பது பற்றிய கேள்விக்கு எனக்கு பிடித்தமானவர் பெயரை பச்சை குத்தியுள்ளேன் என்று பகிரங்கமாக அறிவித்தார்.


இருதினங்களுக்கு முன் ஐதராபாத்தில் நடந்த சினிமா விருது வழங்கும் விழாவில் பிரபுதேவாவும் நயன்தாராவும் ஜோடியாக பங்கேற்றனர். இருவரும் அருகருகே அமர்ந்து சிரித்து பேசியது விழாவில் பங்கேற்றோரின் கவனங்களை ஈர்த்தது. மற்றவர்கள் கவனிப்பதை பொருட்டாகவே மதிக்கவில்லை.


நயன்தாராவின் நடவடிக்கைகள் பிரபுதேவா மனைவி ரம்லத்துக்கு ஆத்திரமூட்டியுள்ளது. அவரை திட்டி எஸ்.எம்.எஸ். அனுப்பி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐதராபாத்தில் பேட்டியளித்த நயன்தாரா யாருக்கும் பயப்படமாட்டேன் என்று அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-


எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. அதையே என்னுடைய பெரிய பலமாக கருதுகிறேன். நிறைய தன்னம்பிக்கை இருக்கிறது. எனவே எதற்கும் பயப்படமாட்டேன். எனக்குள்ள பெரிய சொத்தே எனது குடும்பத்தினர்தான். பொய் பேசுபவர்களை அறவே பிடிக்காது. அவர்களை வெறுக்கிறேன். என்னுடைய கவர்ச்சி எனது சிரிப்பில்தான் இருக்கிறது என்றார்.

தேவயானியை முற்றுகையிட்ட மலைவாழ் பெண்கள்

ஏற்காட்டில் டிவி தொடரின் படப்பிடிப்பு நடந்தது. இதில் கலந்து கொள்ள நடிகை தேவயானி மற்றும் டிவி நடிகை, நடிகைகள் வந்து இருந் தனர். பின்னர் இவர்கள் எஸ்டேட் பங்களாக்களில் தங்கினர்.


இந்த தொடரின் படப்பிடிப்பு சனிக்கிழமை மாலை ஏற்காட்டில் இருந்து பக்கோடா பாயிண்ட் செல்லும் வழியில் நடந்தது.


இங்குள்ள காபி எஸ்டேட்டில் நடிகை தேவயானி பையை எடுத்து கொண்டு நடந்து செல்வது போன்று படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பை அறிந்த திரளான மலைவாழ் பெண்கள் படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு வந்தனர்.


இவர்கள் அனைவரும் படப்பிடிப்பு நடந்த இடம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். கூட்டம் சேருவதை அறிந்த தேவயானி, மலைவாழ் பெண்களிடம் வந்து நலம் விசாரித்தார். தொடரில் நீங்கள் நன்றாக நடித்து வருகிறீர்கள். உங்களுக்காகவே தொடரை பார்த்து வருகிறோம் என்று பெண்கள் தேவயானியிடம் கூறினர்.


பின்னர் அவர்கள் தேவயானியின் கையை பிடித்து வாழ்த்து கூறினர். பிறகு தேவயானி படப்பிடிப்பை பார்க்க வந்தவர்களிடம், படப்பிடிப்பு நடக்க உங்கள் ஒத்துழைப்பு தாருங்கள் என கூறி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.


இதனால் படப்பிடிப்பை காணவந்த பெண்களும், பொதுமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் படப்பிடிப்பு நடந்தது.


இந்த தொடரின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்திற்கு ஏற்காட்டில் நடக்க இருக்கிறது.

ஐஸ்வர்யாவுக்கு 36வது பிறந்த நாள்!

ஐஸ்வர்யா ராய் தனது 36வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார்.

இந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ஐஸ்வர்யா ராய்க்கு இன்று 36வது பிறந்த நாளாகும். இதை மும்பையில் உள்ள தனது மாமனார் குடும்பத்துடன் எளிமையான முறையில் கொண்டாடினார் ஐஸ்வர்யா.


இதில் மிக நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். மணிரத்தினத்தின் ராவணா படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், அதில் நடித்து முடித்து விட்டார். அடுத்து சஞ்சய் லீலா பன்சாலியின் குஜாரிஸ் படத்தில் நடிக்கவுள்ளார். ஹ்ரித்திக் ரோஷனுடன் இதில் ஜோடி சேருகிறார்.


இப்படத்தின் ஷூட்டிங் நாளை தொடங்குகிறது. இந்த நிலையில் இன்று பிறந்த நாளையொட்டி கிடைத்த கேப்பில் அதை அமிதாப் பச்சன் குடும்பத்தினருடன் கொண்டாடினார் ஐஸ்வர்யா. இதுதவிர ரஜினியுடன் எந்திரன், அக்ஷய் குமாருடன் ஆக்ஷன் ரீப்ளே ஆகியவற்றிலும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராய்.


ஐஸ்வர்யாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து இன்று அதிகாலை அமிதாப் பச்சன் தனது பிளாக்கில் எழுதுகையில், இது குடும்பத்தினருடன் நடந்த எளிய நிகழ்ச்சி. ஐஸ்வர்யா நீண்ட காலம் மகிழ்ச்சியுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று கூறியிருந்தார்.

தமன்னாவின் பேராசை

முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கவும் வேண்டும், தேசிய விருதும் வாங்க வேண்டும் என்றால் அதை பேராசை என்றில்லாமல் வேறென்ன கூறுவது?

இப்போதைக்கு தமிழில் நெ.ஒன் என்றால் அது தமன்னா. சம்பளத்தில் நயன்தாரா, த்‌ரிஷாவுக்குப் பிறகு என்றாலும் சூர்யா, கார்த்தி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்துவரும் ஒரே நடிகை இவர் மட்டுமே. மாஸ் ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினுக்கு காதலிக்கவும், குளிர் பிரதேசத்தில் குறைந்த உடையில் நடனமாடவும் மட்டுமே வாய்ப்பளிக்கப்படும்.


தமன்னாவும் அந்த திருப்பணியை‌த்தான் மேற்கொண்டிருக்கிறார். நடிப்பு என்று பார்த்தால் கல்லூரி மட்டும் விதிவிலக்கு.


மாநில விருதே சந்தேகம் என்னும் நிலையில் தேசிய விருதுக்கு ஆசைப்படுகிறது பாப்பா. பொதுவாக இந்த மாதி‌ரி ஆசை ‌ரிட்டையர்ட் நேரத்தில் நடிகைகளுக்கு வருவது. தமன்னாவுக்கு அதுவே சீக்கிரம் ஏன் வந்திருக்கிறது என்பது பு‌ரியாத கேள்வி. ஒருவேளை தேசிய விருதை தன்னுடைய நடிப்பு மாதி‌ரி ரொம்ப ஈஸியாக நினைத்துவிட்டாரோ?

பிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா

பிரபுதேவா இயக்கிய முதல் இந்திப் படம் வான்டட் மிகப் பெ‌ரிய ஹிட். சல்மான் கானின் ச‌ரிந்து கொண்டிருந்த மார்க்கெட்டை இந்தப் படம் தூக்கி நிறுத்தியிருக்கிறது.


இதன் காரணமாக வான்டட் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் பொறுப்பையும் பிரபுதேவாவிடம் அளித்திருக்கிறார் சல்மான்கான். படத்தின் கதை மற்றும் பிற விஷயங்கள் இன்னும் முடிவாகாத நிலையில் இரண்டு விஷயங்களை மட்டும் பிரபுதேவா உறுதி செய்திருக்கிறார்.


படத்துக்கு மோஸ்ட் வான்டட் என பெயர் வைப்பது, நயன்தாராவை ஹீரோயினாக்குவது.


மோஸ்ட் வான்டட் லிஸ்டில் பிரபுதேவா இருப்பது அனைவருக்கும் தெ‌ரிந்ததுதானே.

சன்னில் ஜக்குபாய்

படத்தை வெற்றிபெற வைக்க தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் குறுக்கு வழி, சன் பிக்சர்ஸ். படத்தை எடுத்து சன் பிக்சர்ஸுக்கு தள்ளி விட்டால், எப்படிப்பட்ட மொக்கை படத்தையும் அவர்கள் விளம்பரத்தால் ஹிட் செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை தங்கத்தின் விலையைவிட வேகமாக உயர்ந்து வருகிறது.


கண்டேன் காதலை, வேட்டைக்காரன் படங்களை தொடர்ந்து சரத்குமா‌ரின் ஜக்குபாய் படத்தின் விநியோக உ‌ரிமையையும் சன் பிக்சர்ஸ் வாங்கியிருக்கிறது. ஜக்குபாயை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருக்கிறார். ஸ்ரேயா சரத்தின் மகளாக நடித்திருக்கிறார். படத்தின் மிகப் பெ‌ரிய அட்ரா‌க்சன், கவுண்டமணி. நீண்ட இடைவெளிக்குப் பின் தனது அதே லொள்ளுடன் கவுண்டர் ‌ரி என்ட்‌ரி ஆகியிருக்கிறார்.



வசாபி படத்தின் தழுவலான இதனை சன் பிக்சர்ஸ் வாங்கியிருப்பதால் வேட்டைக்காரன் ‌ரிலீஸ் மேலும் சில வாரங்கள் தள்ளிப் போகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

ஜாலி + கலர்புல் = கோவா : சௌந்தர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் கோவா. தான் ஆக்கர் ஸ்டுடியோஸ் மூலம் திரையுலகில் கிராபிக்ஸ் துறையில் தனி அடையாளம் பெற்று முத்திரை பதித்தவர். கோவா மூலம் ஒரு தயாரிப்பாளராகக் காலடி எடுத்து வைக்கிறார்.


இனி தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த்...

தயாரிப்பாளராகும் எண்ணம் எப்படி வந்தது?


முதலில் பத்து பேருடன் 3 1/2 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது ஆக்கர் ஸ்டுடியோஸ் இன்று 120 பேர் கொண்டதாக வளர்ந்துள்ளது. கிராபிக்ஸ், டிஜிட்டல், எடிட்டிங், அனிமேஷன் என்று விரிந்து அடுத்த கட்டமாக தயாரிப்பில் இறங்கியுள்ளது. சினிமா தயாரிப்பு மூலம் இளைஞர்களுக்கு, திறமைசாலிகளுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் கொடுக்க முடியும். அதனால் தான் இதில் இறங்க முடிவெடுத்தேன்.


முதல் படம் 'கோவா' என்று எப்போது எப்படி முடிவு செய்தீர்கள்?


'சென்னை - 28' எனக்கு மிகவும் பிடித்த படம். அதன் கிராபிக்ஸ் என் ஸ்டுடியோவில் நடந்தது. வெங்கட் பிரபுவின் கிரியேட்டிவிட்டி வேலை பார்க்கும் பாணி எனக்கும் பிடிக்கும். எல்லாரிடமும் நட்புடன் பழகுவார். மொத்த யூனிட்டையுமே அப்படித்தான் வைத்திருப்பார், 'சரோஜா'வுக்கு முன்பே நான் அவரை வைத்து தயாரிப்பது என்று முடிவு செய்து விட்டேன். வேலைகளும் ஆரம்பித்தாயிற்று. படப்பிடிப்புதான் 'சரோஜா' முதலில் தொடங்கப்பட்டது.



'கோவா' கதை எந்த வகையில் உங்களுக்குப் பிடித்தது?


வெங்கட் பிரபுவைப் கேட்டால் தன் படத்தில் கதை எதுவும் இல்லை என்பார். ஆனால் நல்லகதை இருக்கும். 'சென்னை - 28, 'சரோஜா', ஓரூ இரவில் நடக்கும் த்ரில்லர்... அது போல 'கோவா' விலும் வித்தியாசமாக ஒரு லவ் ஸ்டோரி உள்ளது. உயிரோட்டமுள்ளதாக யதார்த்தமாக ஒரு விஷயம் இருக்கிறது.


'கோவா' படத் தலைப்பு பற்றி...?



இந்தியாவில் நல்லதொரு ஹாலிடே டெஸ்டினேஷன் கோவாங்கிற ஊர் என்பது உலகம் முழுக்கத்தெரியும். மிக எளிமையாக எல்லாரையும் சென்றடைந்துள்ள பெயர் இது. இந்தப் படத்தின் கதையும் கோவாவில்தான் நடக்கிறது. இது மட்டுமல்ல கோவா என்றலே அங்குள்ள ஜாலி, கலர் ஃபுல்னஸ் நினைவுக்கு வரும். படமும் ஜாலியாக இருக்கும். காமெடியும் இருக்கும் யூத் ஃபுல்லா இருக்கும். ஃபன்னியா-ஜாலியா இருக்கிற லவ் ஸ்டோரி இது



' வெங்கட் பிரபுவுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி...?


வெங்கட் பிரபு என்னைப்போல் ஒருவர் என்பேன். என்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் நான் எப்படி நட்புடன் பழகுகிறேனோ அப்படித்தான் வெங்கட்டும். எங்கள் டீமிலும் ஏற்றத்தாழ்கள் இருக்காது. அப்படி தான் அவரது யூனிட்டும் இருக்கும். எல்லாரும் ஃப்ரண்ட்லியா இருப்பது எனக்குப் பிடித்தது. ஒரு படம் நன்றாக வர தயாரிப்பாளர் இயக்குநருக்கும் இடையில் கூட கெமிஸ்ட்ரி நன்றாக இருக்க வேண்டும். எங்களுக்குள் நல்லமுறையில் கெமிஸ்ட்ரி இருந்தது.



' உங்களுக்குள் கருத்து வேறுபாடுகளே ஏற்பட்டதில்லையா?



அப்படி எதுவும் ஏற்படவில்லை என்று நான் பொய் சொல்ல விரும்பவில்லை. எங்களுக்குள் நிறைய அப் அண்ட் டவுன்ஸ்... ஏற்ற இறக்கங்கள் கோவாவில் இருந்தது. ஆனால் பேசினால் சரியாகி விடும். எந்தப் பிரச்சினைக்கும் உட்கார்ந்து பேசினால் விடை கிடைக்கும். எந்த விஷயத்தையும் பேசி சரிசெய்கிற புரிதல் எங்களிடம் இருக்கிறது. அதுதான் மிகவும் முக்கியம்.



ஏற்கனவே ஓர் அனிமேஷன் படத்தை இயக்கி வரும் இயக்குநர் சௌந்தர்யாவின் பங்கு கோவாவில் எந்த அளவுக்கு உள்ளது?


நான் இயக்கி வரும் 'சுல்தான் தி வாரியார்' அனிமேஷன் படம் 75% முடிந்துள்ளது. கோவாவில் நான் தயாரிப்பாளர் மட்டும்தான் கதையை தெளிவாகக் கேட்பேன். சந்தேகமில்லாமல் கதை என்னை திருப்தியடையச் செய்துவிட்டால் அதன்பிறகு எந்தத் தலையீடும் செய்வது தவறு. தனக்குப் பிடித்த கதை ஒழுங்காக வர தயாரிப்பாளர் செய்யும் பெரிய விஷயம் பணம் செலவு செய்வது மட்டுமல்ல. எந்தவித குறுக்கீடும் செய்யாமல் இருப்பதும்தான். நானும் ஓர் இயக்குநராக இருப்பதால் என் யோசனை, கருத்துக்களின் எல்லை எதுவரை என்கிற அளவு எனக்குத் தெரியும்".



படப்பிடிப்பு அனுபவங்கள்...?



கோவா'வில் நடக்கும் கதை இது. மீண்டும் போன போது கோவாவில் மழை பிடித்துக் கொண்டது.அதனால் அதே மாதிரி மலேஷியாவிலுள்ள லங்காவி என்கிற இடத்தில் 45 நாட்கள் 150 பேர் போய் படப்பிடிப்பு நடத்தி வந்தோம். வெங்கட் பிரபு டீமே ஒரு ஜாலிடீம். யாருமே கஷ்டப்பட்டு வேலை செய்வது போலத் தெரியாது. எல்லாருமே இஷ்டப்பட்டு வேலை செய்வார்கள். முதலில் அவரது டீம் எப்போது ஜாலியாக இருப்பவர்கள். எப்போது சீரியஸாக இருப்பார்கள் என்கிற குழப்பம் எனக்கு இருந்தது. பயமாகக் கூட இருந்தது. போகப் போக புரிந்து கொன்டு விட்டேன். மலேஷியாதவிர மதுரை, தேனி போன்ற இடங்களுக்கும் படப்பிடிப்புக்கு போய் வந்தேன். எனக்கும் சந்தோஷமான அனுபவமாக இருந்தது. கோவா 75% முடிந்துள்ளது. இதுவரை எனக்கு எந்தவித சுமையும் தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறது. என் முதல் படம் வெங்கட்பிரபுவின் படமாக இருந்தது மிகவும் சந்மேதஷமான விஷயம்".



நீங்கள் ஆக்கர் ஸ்டுடியோஸ் வைத்துள்ளீர்கள். கோவாவில் கிராபிக்ஸ் கலக்கல் இருக்குமா?



கதைக்குத் தேவைப்படமால் கிராபிக்ஸ் வைத்தால் அது நன்றாக இருக்காது, ஏதாவது எடுத்து விட்டு கிராபிக்ஸைத் திணித்து விடலாம் என்று நினைக்கக் கூடாது. 'கோவா'வில் அவசியமான இடங்களில் கிராபிக்ஸ் இருக்கும். கிராபிக்ஸ் பயன்படுத்தியிருப்பது தெரியாதபடி இருக்கும். உற்சாகம் கொப்பளிக்க கலகலப்பாகக் பதிலளித்த சௌந்தர்யாவிடம் பேச்சில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது.


'ஆக்கர் பிக்சர் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் 'கோவா' வேகமாக வளர்ந்து வருகிறது,

சினிமாவில் முத்திரை பதிக்கும் டாக்டர்

சினிமா ஒரு மர்மதேசம். அது யார் யாரை உள்ளிழுத்துக் கொள்ளும். யார் தலையில் கிரீடம் சூட்டும் என்று சொல்ல முடியாது. ஒரு காலத்தில் நாடகத்திலிருந்து சினிமாவுக்கு நடிக்க வந்தார்கள். இப்போது பல்வேறு துறையிலிருந்தும் திரையுலகில் குதிப்பவர்கள் சகஜமாகி விட்டது.


தொழிலதிபர்கள், இன்ஜினியர்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், மேனேஜர்கள் இப்படி பலரும் சினிமாவுக்கு நடிக்க வருகிறார்கள்.


அப்போதைய டாக்டர் ராஜசேகர் முதல் அண்மைக்கால அஜ்மல் வரை பல டாக்டர்கள் நடிகர்கள். இந்த வரிசையில் மிகச் சமீபத்தில் இணைந்திருப்பவர் சீனிவாசன். இவர் ஒரு டாக்டர் சென்னையில் அண்ணா நகரில் ஆனந்தி ஆஸ்பிடல்ஸ்(பி) லிட்டின் சேர்மேன் இவர்.



இவரது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்திருக்கிறார் ஒரு தயாரிப்பாளர். அவர் இவரது தோற்றம் நடை உடை பாவனைகளைப் பார்த்து நீங்கள் சினிமாவில் நடிக்கலாமே என்றிருக்கிறார். டாக்டர் சீனிவாசனுக்கு ஒரு பக்கம் வியப்பு மறுபக்கம் தயக்கம். ஆனால் அந்தத் தயாரிப்பாளரோ தன் படம் பாதியளவு முடிந்துள்ளதாகவும் அதிலுள்ள வில்லன் வேடத்துக்கு இவரே பொருத்தமாக இருப்பார் என்றும் நம்பிக்கையுடன் கூறி, ஊக்கப்படுத்தவே, துணிவாக இறங்கி விட்டார் டாக்டர். அப்படி முதலில் நடித்த படம்தான். உனக்காக ஒரு கவிதை அந்தத் தயாரிப்பாளர் பானு.


இதுதான் டாக்டர் சீனிவாசன் நடிகரான கதை. சீனிவாசன் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி படங்களை விரும்பி பார்ப்பவர். சினிமா மீது எப்போதும் தீராத காதல் கொண்டவர். உள்ளுக்குள் இருந்த மோகம் நிறைவேறிய மகிழ்ச்சி இவருக்கு.



முதல் படம் வெளிவராத நிலையில் அடுத்த படவாய்ப்பு நானே வருவேன். இது பாபு கணேஷ் இயக்கி நடிக்கும் படம். இதில் சீனிவாசன் சாமியார் வேடத்தில் வில்லனாக நடிக்கிறார். இது பேய், ஆவிகள் சம்பந்தப்பட்ட ஒரு திகில் படமாகும். இந்த வாய்ப்பு ஸ்டண்ட் மாஸ்டர் பஞ்ச் பரத் மூலம் கிடைத்திருக்கிறது. அவரது நட்பு மண்டபம் இன்றொரு படவாய்ப்பையும் தேடித் தந்துள்ளது. வழக்கறிஞர் தமிழ்ழகன் நாயகனாக நடிக்கும் இப்படத்திலும் டாக்டருக்கு வில்லன் வேடம்தான்.



அடுத்து பாலு ஆனந்த் இயக்கும் ஆனந்தத் தொல்லை மற்றும் பஞ்ச் பரத் இயக்குநராக அறிமுகமாகும். இந்திர சேனா படங்களிலும் வில்லத்தனம் செய்கிறார் டாக்டர்.



ரகுவரன் தன்னைக் கவர்ந்த வில்லன் நடிகர் என்கிற டாக்டர் சீனிவாசன் திரையுலகில் நானும் அவரைப் போல வில்லனாக நடித்துப் பாராட்டுகளைப் பெறுவேன் என்கிறார் நம்பிக்கையுடன்.



சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகம் ஆகிற டாக்டர் சீனிவாசன் நிஜத்தில் பெரிய ஹீரோ, மருத்துவமனை, டிராவல்ஸ் ரியல் எஸ்டேட் போன்ற பல நிறுவனங்களிள் நிர்வாக இயக்குநர் இவர்.



ஆபரேஷன் தியேட்டரில் நோயாளிகளைப் பார்க்கும் இவரை சினிமா தியேட்டரில் ரசிகர்கள் பார்க்கும் நாள் தொலைவில் இல்லை. டாக்டர் சீனிவாசனின் ஆபரேஷன் சினிமா சக்சஸ் ஆகட்டும்