ஆதவன் - திரை விமர்சனம்

ஆரம்பம் முதல் முடிவு வரை சூர்யாவின் ராட்சியம் தான். முதல்பாதியில் வடிவேலுடன் சேர்ந்து கலகலக்க வைக்கின்றார். பல இடங்களில் மெய் மறந்து சிரிக்கச் செய்கின்றார்கள். சண்டைக்காட்சிகளில் அயன் பாதிப்பில் இருந்து சூர்யா மாறவில்லைபோல் தெரிகின்றது.






நயனுடன் பாடல் காட்சிகளில் நல்ல கெமிஸ்ரி இருக்கிறது. ஆனாலும் படத்தில் சூர்யாவிற்க்கும் நயனுக்குமிடையில் சொல்லிக்கொள்ளும்படி காதல் காட்சிகள் இல்லை. இரண்டாம் பாதியில் கொஞ்சம் முரட்டுத் தனமான சூர்யாவைக் காணக்கூடியதாக இருக்கிறது. வாரணம் ஆயிரம், காக்க காக்க, சில்லென்று ஒரு காதல் போன்ற படங்களில் காட்டிய நடிப்பை விட குறைச்சலாக சூர்யா நடிச்சாலும் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு என்ற படியால் இந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான தமிழக விருது கிடைக்கும் சாத்தியங்கள் அதிகம்.




படம் தொடங்கும் போது சூரியாவின் சிறுவயதுப்படங்கள் தொடங்கி ஜோதிகா மற்றும் அவரின் குழந்தையுடன் நிற்க்கும் குடும்பப் படம் வரை காட்டிவிட்டு டைட்டிலில் சூர்யா எனக் காட்டுகின்றார்கள். சூர்யாவும் மாயவலைக்குள் விழுகின்றாரோ போன்ற எண்ணம் ஏற்படுகின்றது.




சூர்யாவைப் படத்தில் 10 வயதுத் தோற்றத்தில் காட்டுவது எரிச்சலைத் தான் தெருகின்றது. அவருக்குப் பொருந்தவேயில்லை.



நயன்தாரா



முதல் காட்சியிலையே ஜிம் உடையுடன் தோன்றினாலும் எண்ணை அப்பிய முகமாக அந்தக் காட்சியிலும் அதனைத் தொடர்ந்து வருகின்ற பாடலிலும் முகத்தை ஒப்பனை செய்து முகம் சுழிக்கவைக்கின்றார். எனக்குப் பக்கத்தில் இருந்த நயன் ரசிகர்கள் இருவரும் நயனின் அழகு குறைந்துகொண்டே வருகின்றது எனக் கவலைப்பட்டார்கள்.



வில்லுப் படத்தைப்போல் பாடல்களில் வந்துபோனாலும் ஏனோ அவ்வளவு கவர்ச்சி காட்டவில்லை. மற்றும்படி வழக்கமான தமிழ்சினிமா கதாநாயகிதான். தியேட்டரில் இருந்த பச்சிளம் பாலகர்கள் கூட நயன் வர விசில் அடிக்கின்றார்கள்.



வடிவேல்



படத்தின் அச்சாணியே இவர்தான். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வின்னர் கைப்புள்ள போல் நினைவில் நிற்க்கும் பனர்ஜி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கின்றார். சூர்யாவுடன் செய்யும் அலும்புகள் அதிலும் அவ்ரா பாலத்தில் இவர் செய்யும் கூத்துகள் சிரிப்பொலியிலும் ஆதியாவிலும் இனி அடிக்கடி ஒளிபரப்பாகும். துணைக்கு வேறு ஒருவரையும் வைத்திருக்காமல் நீண்ட நாட்களுக்குப் பின்னர் கதையுடனும் கதாநாயகனுடன் சேர்ந்து கலக்கி எடுத்திருக்கிறார்.



கதை



நொய்டாவில் நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க வருகின்ற நீதிபதியைக் கொல்லும் கும்பலின் கதை. நீதிபதியைக் கொல்ல்வேண்டியதற்கான‌ காரணத்தை இன்னும் கொஞ்சம் காத்திரமாகச் சொல்லியிருக்கலாம். நடிகர் ரமேஸ்கண்ணாவின் கதை.



திரைக்கதை, வசனம்



கேஎஸ்.ரவிகுமார் திரைக்கதையுடன் வசனத்தையும் எழுதியிருக்கின்றார். ஏற்கனவே பார்த்த சில படங்களின் திரைக்கதை போல் இருந்ததாலும் அதிலும் சில காட்சிகள் வாரணம் ஆயிரம், அயன் போன்ற படங்களில் சூர்யாவே செய்தவை. அடுத்து வரும் வசனத்தையும் காட்சியையும் முன் சீட் சின்னப் பொடியனே சொல்லுகின்ற அளவுக்கு காத்திரமில்லை. அடுத்து இதுதான் நடக்கபோகின்றது என இலகுவாக ஊகிக்கூடிய காட்சிகள். போரடிக்காமல் திரைக்கதையை ரவிகுமார் அமைத்திருந்தாலும் இறுதிக் காட்சியில் தடுமாறி சொதப்போ சொதப்பு எனச் சொதப்பிவிட்டார். தசாவதாரம் இறுதிக்காட்சி அமைத்தவரா? (ஓஓ தசாவதாரம் திரைக்கதை வசனம் கமல்)எனக்கேட்க வைக்கின்றார். சிலவேளைகளில் தீபாவளிக்கு வெளியிடவேண்டும் என்ற அவசரத்தில் தடுமாறிவிட்டாரோ தெரியவில்லை.




இயக்கம்
தசவாதாரத்தில் சதமடித்த கே.எஸ்.ரவிகுமார் இதில் ரன் அவுட்டாகிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். அதேயளவு பிரமாண்டம் படத்தில் இல்லாவிட்டாலும் பல இடங்களில் லொஜிக் மீறி குருவியில் விஜய் ஒரு கட்டடத்தில் இருந்து இன்னொரு கட்டடத்திற்க்குப் பாய்வது போல் சூர்யாவையும் பாயவிடுகின்றார். இறுதிக்காட்சியில் சொதப்பியது மிகப்பெரிய பலவீனம். முன்பாதிவரை ரவிகுமார் படம் என நினைக்கவைத்தவர் பின்பாதியில் லொஜிக் இல்லாமல் மாஜிக் காட்டியிருக்கின்றார்.
ஒளிப்பதிவு
கணேசின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்தின் பலம். பாடல் காட்சிகளில் அவ்வளவு அழகு. கொல்கத்தாவை அழகாகப் படம் பிடித்திருக்கின்றார். அவ்ரா பாலமும் அதனைச் சூழந்த நீர்நிலைக் காட்சிகளும் குளிர்மை.
இசை
ஹாரிஸ் ஜெயராஜ் ஏற்கனவே பாடல்களை ஹிட்டாகியதை எவ் எம் வானொலிகள் மூலம் கேட்டாலும் பின்னணி இசையில் அவ்வளவாக சோபிக்கவில்லை. முதல் சண்டையில் தகரக் கடைக்குள் யானைகள் புகுந்தது போல் அவ்வளவு சத்தம். நல்ல இனிமையான பின்னணி கொடுக்க காதல் காட்சிகள் இல்லையென்பதும் இன்னொரு குறை.
சண்டைப் பயிற்சி
கனல் கண்ணன், தென்னாபிரிக்காவின் பிரான்ஸ் ஸ்பில்ஹாஸ் இருவரும் சண்டைக் காட்சிகள் இயக்கியிருக்கின்றார்கள். முதலாவது சண்டை அச்சு அசல் அயன் கொங்கோ சண்டைபோல் இருக்கின்றது.
படத் தொகுப்பு
டான் மேக்ஸின் படத் தொகுப்பு படத்தின் பலம். சில பார்த்த காட்சிகள் தான் என்றாலும் போராடிக்காமல் தொகுத்திருக்கின்றார். படத் தொகுப்பின் வேகம் படத்தின் இன்னொரு பலம்.
தயாரிப்பு
உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு என்பதால் அவரும் ஒரு காட்சியில் தோன்றுகின்றார். இன்னும் அவர் குருவியில் இருந்து மீளவில்லை என்பது சில காட்சிகளில் தெரிகின்றது.
சரோஜாதேவி, மறைந்த நடிகர் முரளி, ஷயாயி ஷிண்டே, அனுஹாசன், ரமேஸ்கண்ணா, பெப்சி விஜயன், ரியாஸ்கான் உட்பட பெரிய பட்டாளமே நடித்திருக்கின்றது.
அபிநய சரஸ்வதி சரோஜாதேவியை அதீத ஒப்பனையுடன் வழக்கமான அவரின் எம்ஜிஆர் புராணங்களுடன் உலாவவிட்டிருக்கின்றார்கள். முஸ்லீம்களை கூலிக்கு கொலைசெய்பவர்களாகவும் கொல்கத்தா பிராமணர்கள் மீன் சாப்பிடுவதையும் காட்டியிருக்கின்றார்கள். ( படத்தில் பிரச்சனைகள் கிழப்பவேண்டும் என்றால் இவைதான் பிரச்சனையானவை).
மொத்தத்தில் ஆபாச இரட்டை அர்த்த வசனங்கள், காட்சிகள் அற்ற குடும்பத்துடன் நகைச்சுவைக்காக ஒரு தடவை பார்க்ககூடிய சிறந்த பொழுதுபோக்குப் படம்.
ஆதவன் - அதீத‌ எதிர்பார்ப்பு குறைந்த பலன்

0 Response to "ஆதவன் - திரை விமர்சனம்"

Post a Comment