கிருஷ்ணர்- குசேலர், கர்ணன்- துரியோதனன், கமல் - ரஜனி

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு. "


என்பது வள்ளுவரின் திருவாக்கு. நட்பு என்பது விலைமதிக்க முடியாதது. புராண காலங்களில் கிருஷ்ணன் குசேலன் நட்பையும் கர்ணன் துரியோதனன் நட்பையும் நட்புக்கு எடுத்துக்காட்டாக கூறுவார்கள். இவர்கள் நட்பை விட சிறந்த நட்பாக இந்தக் காலத்தில் சொல்லகூடிய நட்பு கமல் ரஜனி நட்பாகும்.


கமல் 50 விழாவில் தான் இவர்களின் நட்பின் உச்சக் கட்டத்தைப் பலர் பார்த்திருப்பார்கள். ரஜனி சினிமாவில் காலெடி எடுத்து வைத்த காலம் முதல் கமலுடனான நட்பை எந்தக் கட்டத்திலும் கைவிடவில்லை.






தமிழ்த் திரையில் போட்டியாளர்களான இருவரும் ஒருவர் மேல் ஒருவர் நட்புப் பாராட்டினார்களே ஒழிய என்றைக்கும் பொறாமைப் பட்டதில்லை. ஆனால் ஒருவருக்கு ஒருவர் போட்டியாக இருந்தாலும் கமலின் படங்கள் ஒரு திசையிலும் ரஜனி படங்கள் இன்னொரு திசையிலும் இருந்தன.



எத்தனையோ பேட்டிகளிலும் நிகழ்ச்சிகளிலும் ரஜனியும் சரி கமலும் சரி தங்கள் நட்பை என்றைக்கும் உயர்த்தியே கூறிவந்தார்கள். அபூர்வராகங்கள் படத்தில் இருவரும் முதன் முதலில் சேர்ந்து நடித்தார்கள். அதன் பின்னர் பல படங்கள் இணைந்து நடித்தாலும் இந்த இரண்டு போட்டிக் குதிரைகளையும் வைத்து பலர் பணம் பண்ண இருக்கும்போது தனித் தனியாக நடித்தால் இருவருக்கும் பெயரும் பணமும் கிடைக்கும் என்ற கமலின் கருத்துப் படி இருவரும் பிரிந்து தனித் தனியே அவர்கள் பாணியில் நடித்தார்கள்.



கமல் 50 பிரமாண்ட விழாவில் ரஜனி கமலைப் பற்றிக் தன் பாணியில் கூறியவை :" அபூர்வ ராகங்கள்' படத்துக்குப் பிறகு மூணு படங்களில் நானும் கமலும் சேர்ந்து நடிச்சோம். அப்பவே ஃபீல்டுல கமல் பெரிய பிஸ்தா. 'இந்தப் படத்துல ரஜினியைப் போட வேணாம்'னு கமல் ஒரு வார்த்தை சொல்லி இருந்தார்னா, கண்டிப்பா எனக்கு அந்த வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கும். ஆனால், கமல் அப்படிச் சொல்லலை. " அத்துடன் கமல் தான் என்னுடைய கலையுலக அண்ணா என கமலைப் பற்றிச் சிலாகித்துப் பேசினார்.



வேறு எந்த நடிகர்களும் இப்படிச் சொல்வார்களா? ரஜனியிடம் இருக்கும் பெரும்தன்மை ஏனோ அவர் ரசிகர்களிடம் காணக்கிடைப்பதில்லை.



நிகழ்ச்சி தொடங்கமுன்னர் திவ்யதர்சினி ரஜனி கமல் இருவரிடமும் பேசும் போது கமலிடம் கேட்டார் " சிவாஜி படத்தில் ரஜனி சிவப்பாக மாற முல்தானி மெட்டி பூசிய பின்னர் தான் கமலஹாசன் கலரில் வருவேன்" என கமலின் கலரைப் போற்றுவார், இதனைப் பார்த்த போது என்ன நினைத்தீர்கள் என திவ்யதர்சினி கமலிடம் கேட்டபோது "அவர் இதனை விட இன்னும் சொல்லுவார், அவரின் மனதின் கலர் அது" என்பார் அந்த நேரம் ரஜனியின் முகத்தில் ஏற்படும் மாற்றம் உண்மையான நட்பு அதுதான் எனக் காட்டும்.
பின்னர் விழாவின் இறுதியில் கமல் பேசும்போது "சினிமாவில் என்னையும் ரஜினியையும் போல நண்பர்கள் யாரும் கிடையாது. ஒரு சக நடிகனைப்பத்தி ஒரு பொது மேடையில் மனசுவிட்டு எவன் இப்படிப் பேசுவான்? அந்த மனசு ரஜினிகிட்ட இருக்கு. தன்னைத் தாழ்த்தி என்னை உயர்த்திப் பேசி இருக்காரு. நான் ஒரு சவால் விடுறேன். தமிழ் சினிமாவில் ரெண்டு ஹீரோக்கள் இருந்தாங்கடா. கமல் - ரஜினின்னு. அவங்களைப் போல நட்பு சினிமாவில் யார்கிட்டே இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம். எங்கள் முதல் ஜெனரேசனில் இப்படியான நட்பு எவரிடமும் இல்லை," என்ற கமல் அடுத்த ஜெனரேசனிடம் நான் சவால் விடமாட்டேன் எங்கள் நட்பை விட உங்கள் நட்பு உயர்ந்ததாக இருக்கவேண்டும் என வேண்டுகோளூம் விடுத்தார்.
ரஜனிக்கும் கமலுக்கும் இருக்கும் நட்புபோல் ஏனோ இருவர் ரசிகர்களிடம் இருப்பதில்லை. அதிலும் ரஜனி ரசிகர்கள் கமல் ரசிகர்களை எதிரிகளாகத் தான் பார்ப்பார்கள். பெரும்பாலான கமல் ரசிகர்கள் ரஜனி படத்தை ரசித்துப் பார்த்தாலும் கிண்டல் செய்யமாட்டார்கள் ஆனால் ரஜனி ரசிகர்களோ கமல் படங்களில் சின்ன தவறையும் பெரிதாக எடுத்து கிண்டலடிப்பார்கள்.
சில காலங்களுக்கு முன்னர் வார்த்தைகளால் சண்டைபோட்ட ரசிகர்கள் இப்போ தம் வலைகளினூடு சண்டைபோடுகின்றார்கள். இதில் கொடுமை என்னவென்றால் சிலர் கமலைத் திட்டுவதற்க்கே தனிவழியாக வலை வைத்திருக்கிறார்கள்.
எந்த மனிதரிடமும் பலமும் பல்வீனமும் இருக்கும். கமல் மேல் கல் எறிபவர்களில் ஒரு கேள்வி முதலில் உங்களைச் சுத்தம் செய்துகொண்டு கமல் மேல் கல்லெறியுங்கள்.
என்னுடைய மிகவும் நெருக்கமான நண்பன் ஒருத்தன் ரஜனி பைத்தியம் ( பைத்தியம் என்பது சிறந்த சாதாரண ரசிகனை விட சிறந்த ரசிகன்) நான் கமல் ரசிகன்( பைத்தியம் அல்ல)ஆனால் இருவருக்கும் என்றைக்கும் எந்த சண்டையும் சச்சரவும் வருவதில்லை காரணம் எமக்குள் இருக்கும் புரிந்துணர்வு ஆனால் இந்தப் புரிந்துணர்வு பலரிடம் இல்லாமல் இருக்கின்றது.
பெரும்பாலன கமல் ரசிகர்கள் அன்பே சிவம் நல்லசிவம் போலவே இருக்கின்றார்கள். யார் என்ன சொன்னாலும் "பிழைத்துப் போகட்டும்" என பெரும்தன்மையாக விட்டுவிடுவார்கள். இதுவே இவர்களின் பலமும் பலவீனமும்.
ரசிகர்கள் எப்படித் தங்களுக்குள் அடிபட்டாலும் இந்த நூற்றாண்டின் சிறந்த நண்பர்கள் உலகநாயகன் கமலும் சூப்பர் ஸ்டார் ரஜனியும் தான் என்பது நட்பை உணர்ந்தவர்களுக்குத் தெரியும்.

0 Response to "கிருஷ்ணர்- குசேலர், கர்ணன்- துரியோதனன், கமல் - ரஜனி"

Post a Comment